என்னுடையதான காதலையும் காதல் சார்ந்த நினைவுகளையும் சுமந்தபடி பிரகாசிக்கிறது குளத்தங்கரை படிகள்.
என் தாத்தாவின் இறப்பின் போது கரைத்த அஸ்தியின் சுவடுகளில் தொனித்து தென்படுகிறது குளத்தங்கரை சோகம்.
மகிழ்ச்சியின் விளிம்புகளையும் சோகத்தின் எல்லைகளையும் சுமந்த குளத்தங்கரையை காண்கையில் இப்போதும் மகிழ்ச்சி கொள்ளும் மனம்.
குளத்து நீரில் மூழ்கி குளித்த நான் நீண்டு நெடிந்த இடைவெளிக்கு பின் அது சார்ந்த நினைவுகளில் மூழ்கி திளைக்க எங்கிருந்தோ பறந்து வந்த காகமொன்றுதன் தாகத்தை தீர்க்கும் பொருட்டு குளத்தை எட்டிப்பார்க்க வறட்சியுற்ற குளத்தைக் கண்டு ஏமாந்தது காகம் என்னுடன்......
மூச்சிறைக்க மிதிப்பட்டு மணியோசையினூடே இழைத்துத் தேயும் மிதிவண்டி அறிந்திருக்கக்கூடும் தந்தையின் பணிப்பளுவை.....
அறியாப் பிள்ளையென செய்த தவறுகளுக்கு பரிந்துரைத்ததில் தொடங்கி பட்டதாரியென முகிழ்த்து நிற்கும் எனதான வளர்ச்சிக்கு உரித்தான அவரின் செயல்பாடுகளை விசும்பல்களினூடே கடுகடுக்கும் எனதுதடுகள் உமிழும் சொற்சுமைகள்.
நீண்ட வரிசையின் நிதானிப்பில் மெல்ல நகர்கிறது திரையரங்க வாயிலில் ரசிகர்களின் பெருங்கூட்டம்!
மாத வருமானத்தின் மகத்தான பகுதியைதிரையரங்க நுழைவுச்சீட்டு விழுங்கிவிடஅறிவிக்க இயலா உணர்வுகளை அசைபோட்டுப் பார்க்கும் மனம்!
எல்லை மீறிய ரசிகனின் போற்றுதலுக்கு எடுத்துக்காட்டாக வானுயர நிற்கும் நாயகனின் நிழலுருவத்திற்கு அபிஷேகப்படுத்தப்டுகிறது பல குடங்களில் வெறுமையை நிரப்பிய பால்!
நிலைபெற்று நிற்கும் உன்னதத்தைத் தொலைத்த நிஜ உலக நாயகர்கள் தங்களின் வெற்றியை தொலைத்த எதிர்காலத்தை எதிர்பார்த்தபடி கண்டுமகிழ்கின்றனர் நிழலுலக நாயகனை......!
நன்றி : புன்னகை
கடிதம்
உன் கைவண்ணத்திலான ஆயிரம் தகவல்களை பெற்றுவிட்டேன் மின்னஞ்சல் வழியிலும் அடிக்கடி அச்சுறுத்தும் அலைபேசி வழிகுறுஞ்செய்திகளிலும்...... எனினும், எவையும் உயிர்ப்பிக்கவில்லை நமதான நட்பை உன் கையெழுத்தைத் தாங்கிய கடிதத்தைப் போன்று.....
- இனிய நந்தவனம். (பிப்ரவரி-2009)
Thursday, October 23, 2008
சொற்கள் மீதான எதிர்பார்ப்பு்
எல்லோரை குறித்தும் படுயதார்த்தமாய்உரசி பார்க்கிறது உனது சொற்கள்.
உதடுகளுக்கிடையே துளிர்க்கும்காற்றுவெளியில் கலந்துவிட்டபடி எல்லோரும் இடம்பெற்றிருக்க என்னை குறித்த உனது வெளிப்பாட்டைஎதிர்ப்பார்த்தபடி எத்தனிக்கிறது எனது மனம்.
எறுபுகளின் அணிவகுப்பையொத்தபடி வரிசையாய் கட்டவிழ்ந்த உனது சொற்களுக்குள் வாழ்க்கைக் குறித்து எல்லாம் தொனித்திருக்க உன்னையே வாழ்க்கையெனநினைத்துருகும் என்னை குறித்து எதிர்ப்பார்த்து ஒன்றுமற்றபடி ஏமாந்தது எனதிதயம்.
கோழிக் குழம்பு வாசனை
அதிகாலை தூக்கத்தை கலைத்த எங்களின் விழிப்புகளுக்கெல்லாம் உரித்தான சேவல் அறிந்திராது அதன் வாழ்வின் இறுதி நாளை...
மூலைத்தெரு முனீஸ்வரனுக்கு பலி கொடுக்கும் நாள்வரைக்கும் சுற்றித்த்ரிந்ததென்னவோ எங்களைத்தான்....
நிதர்சனப்பட்ட அதன் நினைவுகள் மனக்கண்முன் ஓடிக்கொண்டிருக்க பொங்கி வலிந்த குருணை அரிசிச்சோற்றின் வாசனையிலும் கொதித்து அடங்கிய கோழிக்குழம்பின் வாசனையிலும் அடங்கிப் போனது சேவலும் அது சார்ந்த நினைவுகளும்....