Friday, February 13, 2009


சொற்களை உதிர்க்கும் உதடுகள்

கார்மேகங்களினூடே
விரையும் மழையையொத்தபடி
பிறிதொன்றைக் குறித்த‌
சிந்தனையேதுமில்லாமல் உதிர்க்கின்றன‌
உனதுதடுகள்
சொற்சுமைகளை.
பாதிப்பேதும் நிகழாவண்ணம்
ஓடி ஒளித்து வைக்க பழகிக்கொண்டேன்
உன் மீதான என் நேயத்தை
குஞ்சுகளை காக்கும்
தாய்ப்பறவையென.
மதிப்பீடுகள்

எல்லோரும் உமிழ்கின்றனர்
அவரவர் குறித்த மதிப்பீடுகளை.
ஆழத்துளைத்து ஈடுபடுகிறேன்
என்னுள்ளான தேடுதலில்
எனக்கான மதிப்பீட்டை நிறுவ.
குறைகளை விலக்கி
நிறைகளினூடே உயர்கிறது
என்னுடையதானது.
அர்ப்பமென எண்ணநேரும்
பிறருடையதானவைகள்
தகர்ப்புற செய்தபடி மேலெழுகிறது
கயமையின் வேடம் தரிக்கும்
எனதான நிறைகளை.
நேய வெளிப்பாடு

நீண்டு நெடிந்தேயிருந்தது
நேய வெளிப்பாடு குறித்த‌
எனதந்த உரையாடல்

பதப்பஞ்சமேதும் நிகழ்வுறா வண்ணம்
வலுவுடனே எத்தனித்தது
அதன் சொற்சுமைகள்.

தகிப்புகளினூடே தவிப்புறும்
சாலையோர யாசகனின்
வேண்டுதல்களை புறந்தள்ளி கடக்கிறேன்
விரையும் காற்றென‌
நேய வெளிப்பாடு குறித்த எனதப்பதங்களையும் மீறி.....
மரமான நான்

என்னுள் துளிர்த்து பெருகும்
தவிப்புகளுடனான துயர்களை உதிர்க்கிறேன்
கல்லென இறுகித் தளர்ந்த‌
உனதிதயத்தை தழுவும் பொருட்டு
பாலை நிலமொன்றில்
பொறுக்கவியலாமல்
சருகுகளை உதிர்க்கும் மரமென.....
நேயத்தின் சுவடுகள்

நுனிப்புல் மேயும் அக்கன்றென‌
விரைந்து புரட்டுகிறேன்
உனதெழுத்தைத் தாங்கிய குறிப்பேடொன்றை.

சட்டென இடரி வீழ்ந்து
சொற்கள் சொட்டும் அப்பக்கத்தை
கூர்நோக்கி பார்க்கிறது எனதந்த பார்வை.

பிரியத்துடனான உனதெதிர்பார்ப்பை
தகிப்புற்று தாங்கும்
பதங்கள் வற்றிக்கொண்டிருந்தன.
இறுகப்பற்றிக் கொண்டலையும்
உன்னுடனான நினைவுகளின் எச்சங்கள்
பற்கள் காட்டி எள்ளலோடு நகைத்தன‌
எனதிருப்பின் மீது.

நேயத்தின் சுவடுகளற்று
அன்பில்லா பாலைநிலத்தையொத்த‌
உனதிருப்பை புரிதலின்றி புறக்கணித்து
என்னுள் வியாபித்திருந்த பிரிவின் சுவடுகள்
மெல்ல இளகிக் கொண்டிருந்தது
பெய்து தீர்க்கும் மழையென.
என் மீதான நட்பு

தன் மொழியறியா
ஸ்பரிசத்தை உமிழ்ந்தவாறு
முகம்தூக்கி மலர்கிறது
உன் மீதான என் நேசம்.

கேவல் ஒலிகளுக்கிடையே
குளிர்காற்றென‌
உனதன்பை பரிசளித்து மலர்விக்கிறது
உன்னுடனான என் பொழுதுகள்.

தூங்கா இரவுகளின் நடுநிசிகளில்
புலர்ந்தெழுகிறது
கோட்பாடுகளற்ற கனவுகள்
பிணக்குகளற்ற நமதான உறவின் கிளர்ச்சியென.

பார்வை தகிப்புகளிடையே
உறுத்துவதாய் உணர்கிறேன்
உன் மீதான என் காதலை புறந்தள்ளும்
என் மீதான உன் நட்பை.....
வன்மத்தின் பக்கங்கள்

மெல்லிய தகிப்புகளின்
விளிம்பிலமர்ந்த‌
தூங்கவியலா இரவுகள்.

குரல்வளையை கடந்து திரும்பிய‌
சொற்களின் மீதான‌
கடக்கவியலா எதிர்பார்ப்பின் தருணம்.

மறுநொடியில் நிகழவிருந்த‌
மரணத்தின் கூர்முனைத் தீட்டிய குரூரங்களை
கடந்த தப்பிப்பிழைத்த பொழுது.

பின்னிரவு மழைநேரத்தில்
மிச்சமிருந்த மகிழ்ச்சியை உருக்குலைத்த‌
நணபனின் மரண செய்தி.

உள்ளத்தில் ஊடுருவி
மெல்லக் கடக்கிறது
வாழ்வின் உறைந்த பொழுதுகள்
நிசப்தத்தின் நிதானிப்பில் திரும்பிப்பார்க்கும்
வன்மத்தின் பக்கங்களென.
பூர்வீக வீடுடனான நினைவுகள்

பதங்களேதுமின்றி விடைபெற்ற‌
அக்கணத்தோடிணைந்த நினைவுகள்
முன்னிறுத்தியபடி சுவடுகளால் நிரப்பியது
வாழ்ந்த இடத்துடனான பிணைப்பை.

தேவைகளின் பொருட்டு
முட்டிமோதி எதிரொலித்த‌
ஆசைகளின் ஆக்கிரமிப்புகளை
உயர்த்தெழ செய்யும் பொருட்டு
விற்றுத்தீர்ந்த அந்நிலத்துடனே
வீரியமற்றுப் போனது
முன்னோர்கள் மீதான மதிப்பு.

தனக்கென தனித்த‌
நிலங்களேதுமில்லாதவன் அறியக்கூடும்
வாழ்வின் நிலைகளிலெல்லாம்
நீங்காமலிடம் பெற்ற‌
பூர்வீகங்களின் பிரத்யேகங்களை...

கைவிடாது தொற்றிக்கொண்டலைகிறது
நழுவி நகர்ந்த‌
எனத்ந்த பூர்வீக வீடுடனான நினைவுகள்
குருதிகக்கும் இதயத்தின்மீது
கூர்தீட்டப்பட்ட கத்திகளைக் குத்தியபடி...
பார்வை படிந்த கணம்

உயர்ந்தெழும்பி விழுகிறது
எனைநோக்கி விரையும் வார்த்தைகள்
''ஒற்றைக்காலில் தவமிருப்பதாக....''

எக்கணத்திலும் கவலையுற்றிருந்ததில்லை
காலத்தோடிணைந்த எனதந்த செயல்பாடுகள் குறித்துமிழும்
பிறிதொருவரின் இத்தன்மைத்தாயின சொற்சுமைகளை.

இறக்கைகள் முளைத்து
அவ்வப்போது பறக்கமுயலும்
அவ்வார்த்தைகள் குறித்த‌
யாதொன்றின் சுவடியை தாங்கிய முயற்சியையும்
முளைக்கவிடுவதில்லை என‌தாளுமை.

தப்பிப் பிழைப்புற்று விரிந்து
என்னுள்ளுறையும் அவ்வார்த்தைகளை
தவித்தொதுக்கியே பழக்கமுற்று நீடித்த‌
என‌தான இவ்வழக்கத்தை
முகத்திலறைந்தாற்படி உறைத்தது
ஊனமுற்றிருந்த தோழனொருவனின்
ஒற்றைக்கால காலணியைத் தாங்கிய வாயிலின் மீது
படிந்த எனதந்தப் பார்வை...
நினைவலைகள்

மெல்லிய இருள் படர்ந்த‌
கறுத்த மேகத்திற்கிடையேயானதொரு பொழுதில்
இழையோடியபடியிருக்கும் எனதான தனிமை
மெளனித்திருந்த வேளையுடன்.

ஓயாமல் சிறகடிக்கும்
முடிச்சுகளிடையே உடலைத் தாங்கிய‌
தட்டான்களையொத்தபடி
தனித்த அறையொன்றின் வாயில் வழியே
பாய்ந்து தழும்பி வழியும்
உனதான அந்தரங்கங்களை
அறிய துடிக்குமென் ஆவல்கள்
வரம்புகளின் எல்லை கடந்து.

சிலிர்த்தெழ செய்யும் நியாபக சுவடுகளை
கட்டவிழ்த்தபடி கடக்கிறது
நேயத்தின் பொருட்டு காத்திருந்த‌
சினேகிதனொருவனின் அழைப்புகள்.

மேலெழும்பி அடங்குகிறது
காலத்தோடிணைந்த நினைவலைகள்
மழைநீர் படுதலின் விளைவாயு
கரையும் மண் மேடென....

Thursday, February 12, 2009

கனவுகளுடனான இரவுப்பொழுதுகள்


அற்பக்கனவுகளினூடே அல்லாடுகிறது

என் இரவுப்பொழுதுகள்.

பொறாமையுடனான

குரூரம் ததும்பியும்

நேயம் நிறைந்தும்

எத்தனிக்கின்றன அவை.

அச்சமுற செய்யும்

என்னுள் நிகழும் அக்கனவுகளை

விலக்க முனைந்து

தோல்வியுறுகிறேன்

இயலாமையின் வேடம் தரிக்கும் அற்பனென

கனவுகளின் பிரதிபலிப்பினூடே.

நன்றி : வடக்கு வாசல் (பிப்ரவரி 2009)

Monday, February 9, 2009


என்னுள்ளான நேசம்

முன்னெப்போதும் நிகழ்ந்திரா இக்கணத்தில்
என்னுள்ளுறைகிறது
அவ்விருப்பம்.

தருணங்களனைத்திலும் கடிந்துகொண்டவாறே
நீண்டு
நெடிந்தேயிருக்கிறது

எனதுள்ளத்தினுள்
தாழிட்டுக்கொண்டும்

வெளிவர
மறுத்தபடியும்
அடைக்காக்கும்
அந்நேசம்.


பேரோசை எழுப்பியபடி அனுமானிக்கிறது

நடுங்கிப் பிளவுற்றிருக்கும்
எனதந்த
மனதினுள்ளுயரும் புன்னகை நெருக்கடிக்குள்ளான பொழுதொன்றில்.

பிறிதொருவரின் கரம் அரவணைக்கத் தயாராயிருப்பதாய்
அழுகிய நாற்றமெடுக்கும் பிணமொன்றை முன்னிறுத்தி
கசகசப்பும் அருவருப்புமாய் உரூப்பெறுகிறது
வெளிக்காட்டாமலிருந்த பிறர்மீதான எனதந்நேசம்.