Tuesday, December 25, 2012

Monday, December 24, 2012

Sunday, December 16, 2012

குழந்தைகளைத்தேடும் கடவுள்
நூல் விமர்சனம்

எழுத்தாளர் ஐரேனிபுரம் பால்ராசய்யாமனதைத் தொடும் ஹைக்கூ கவிதையோடு களம் இறங்கியிருக்கிறார் கவிஞர் ச.கோபிநாத். தனது குழந்தைகளைத்தேடும் கடவுள் என்ற இந்த இரண்டாவது கவிதைத்தொகுப்பு நூலின் மூலமாக பல வாசகர்களின் மனதைத் தொட்டிருக்கிறார்.எளிமையான விஷயங்கள் கைக்கூவாய் இவரது பேனாவிலிருந்து புறப்பட்டு அது வாசகனை வந்தடையும்போது பிரமிக்க வைக்கிறது. இந்த இளைய படைப்பாளி குழந்தைகளின் வாழ்வியலை அழகாய் வடித்தாலும் சமுதாயத்தின் மீதுதான் அதிகமாய் தனது சாட்டையை சுழட்டியிருக்கிறார்.குழந்தைகளின் கேள்விகள் ஆழமாய் கற்பித்தன புத்தகங்களில்லா உலக அறிவு 
என்று குழந்தைகளைப்பற்றின அறிவுசார்ந்த கவிதைகளை வெறும் மூன்றே வரிகளில் முத்து முத்தாய் எழுதியிருப்பது நூலுக்கு மேலும் மேலும் அழகு சேர்க்கிறது.சமுதாயப்பார்வையும் அதுசார்ந்த கவிதைகளும் நிஜங்களின் வலிகளை நியாயப்படுத்துகின்றன. உயிரினங்களின் உணர்வுகளை, பறவைகளின் ஏக்கங்களைக்கூட பதிவு செய்திருக்கிறார். திசை திரும்பின தாகத்துடன் பறவைகள் வறண்ட குளம்.இப்படி முப்பது வரிகளில் சொல்லவேண்டிய விஷயங்களை வெறும் மூன்றே வரிகளில் முத்தாய்ப்பாய் சொல்லியிருப்பது அழகு.வானத் தூரிகையின் வண்ண ஓவியம் அந்திப் பொழுதுஎன்று அந்திவானத்தின் அழகை மிகவும் அழகாய் ரசிக்கிறார்.போதையேற்றும் அறிவியல் சாதனம் தொலைக்காட்சி 
என்று சமூகத்தின் பண்பாட்டு சீரழிவுகளை அழகாகவே படம் பிடிக்கிறார் இந்த அழகிய கவிஞர் ச.கோபிநாத்.எளிமையும் எதார்த்தமும் கொண்டு கவிதைகள் கவன ஈர்ப்பை பெறுவதால் எல்லோர் இல்லங்களிலும் இருக்க வேண்டிய கவிதைத்தொகுப்பு. இந்த குழந்தைகளைத் தேடும் கடவுள்.வெளியீடு : வாசகன் பதிப்பகம்

Sunday, May 20, 2012

நூல் அறிமுகம்குழந்தைகளைத் தேடும் கடவுள்

கலைத்திலகம், சகலகலா வித்தகர், முத்தமிழ் வித்தகர், நகைச்சுவை அரசு எனப்பல விருதுகளை இளவயதிலேயே பெற்றுள்ள கவிஞர் ச. கோபிநாத் அவர்களின் இரண்டாம் படைப்பாக வெளிவந்துள்ள இந்த ஹைக்கூ கவிதை நூல், தமிழிலக்கிய உலகில் தனக்கென தனியிடம் பிடிக்கும் என்பதும், பல பரிசுகளை பெறும் என்பதும் வளர்ந்த பலபடைப்பாளிகளின் கணிப்பு.


ஆங்கில ஆசிரியரான இவர் தமிழின் மீது கொண்ட தனியாக்காதலாலும் குழந்தைகளோடான தன் வாழ்வியல் அனுபவங்களைப் பதிவு செய்யும் நோக்கிலும் எழுதியுள்ள இந்நூலின் ஹைக்கூக்களுக்கு பொருத்தமான கோட்டோவியங்கள் இடம்பெற்று சிறப்பு சேர்க்கிறது "குழந்தைகளைத் தேடும் கடவுள்".


சிறப்பான வடிவமைப்பு, அருமையான ஓவியங்கள், அழகுபடுத்தும் அணிந்துரைகள் எனப்பலவற்றால் உயிர்த்தெழுகிறது இந்நூல்.


96 பக்கங்கள்
விலை ரூ. 50 -


நூல் தேவைக்கு
கவிஞர் ச.கோபிநாத்
9790231240

Tuesday, May 15, 2012


 கவிஞர் ச. கோபிநாத்தின் ''குழந்தைகளைத் தேடும் கடவுள்" நூலை அவர் வெளியிட ஆய்வாளர் இலா. வின்சென்ட் பெற்றுக் கொள்கிறார்...

கவிஞர் ச.கோபிநாத்தின் பெற்றோர் நூல் வெளியீட்டு விழாவில் கெளரவிக்கப்படும்போது...

Friday, May 4, 2012

எனது "குழந்தைகளைத் தேடும் கடவுள்" நூல் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழ். . . .
அவசியம்  வாங்க.....

Friday, April 27, 2012
தவறுதலால் கிடைத்த பலன்

தூரத்து உறவினரின்
மரணச் செய்தியை
சுமந்து வந்ததாக இருக்கலாம்.
பள்ளிக் கால நண்பன்
தொடர்பைத் தேடிப் பிடித்து
அழைக்க முயன்றதாக இருக்கலாம்.

பரிசு கிடைத்திருப்பதற்காகவோ
காப்பீட்டுக்கு விளக்கம் தரவோ
கார்பரேட் கணவான்கள்
அறுக்க அழைத்ததாக இருக்கலாம்.

கவிதைகளை வாசித்த
பரந்த இதயம் கொண்ட யாரேனும்
பாராட்டுவதற்கு அழைத்ததாகவும் இருக்கலாம்.
புதிய தொடர்பெண்ணை சுமந்தபடி
அலைபேசி அழைத்துக் கொண்டிருந்த
சில நொடிகளுக்குள்
பல நூறு எண்ணங்களை
அனுமானித்துக் கொண்டிருக்கையில்
வந்த அழைப்பு
தவறிய அழைப்பு ஆகியிருந்தது.
புதிய தொடர்பொன்றை
சுமக்கத் தொடங்கியிருந்தது அலைபேசி.

ச.கோபிநாத்

நன்றி
வடக்கு வாசல்
ஏப்ரல் 2012 இதழ்


Monday, March 26, 2012


புலம்பெயர் நிலை

சுவர்கள் சூழ நாம் இருப்பினும்
அவை நமதில்லை.
உரிமை கொண்டாடப்படும் அறைகள்
நாளை வேறொருவருடையதாகிறது.
புலம்பெயர் அகதிகளாய்
இடம் மாற்றப்படும் தொட்டிச் செடிகள்
சூரியக் கதிர் தேடி அலைய நேரும்
புதிதாய் குடியமரும்
அறிமுகமில்லா முகங்களை
பார்த்து வியக்கும்
சுவர்களோடு சுவர்களாய்
ஊர்ந்துத் தேயும் பல்லிகள்
புது வீடுத் தேடும் நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்படுவர்
வீடுத் தேடி வந்தவர்களும்
தகவலளிக்கும் கடிதங்கள் சுமந்துவரும்
அஞ்சல் அதிகாரிகளும்
அவ்வப்போது பொருட்கள் சுமந்து
புது வீடுத் தேட வைக்கும்
சாமானியர்களின் வாழ்நிலையை
அடையாளிக்கும் வாடகை வீடுகள்
மெய்ப்பிக்கின்றன
இன்று நம்முடையது
நாளை வேறொருவருடையதாகலாம்


ச.கோபிநாத்

நன்றி -  வடக்கு வாசல் மார்ச் 2012

Friday, March 16, 2012குழந்தைகளின் கைகளின்
வண்ணச் சுவடுகள்
மழலை ஓவியங்கள்


ச.கோபிநாத்

Thursday, March 1, 2012


வீணாக வில்லை
குழாயில் ஒழுகும் நீர்,
தாகம் தணிக்கும் பறவைகள்!!
-ச.கோபிநாத்
நன்றி - வைகறை இணைய இதழ்

கைகள் குறுக்கி
கன்னங்கள் குவித்து
எச்சிலொழுகத் தூங்கும்
குழந்தைகளின் தூக்கத்தில்
தொலைத்துவிடுகிறோம்
நம்மையும் நம் துயரங்களையும்.

ச.கோபிநாத்

Friday, February 24, 2012


அறிவியல் ஆயிரம்

வண்ண வண்ண ஆடைகளை

நவக்கிரகங்களுக்குச் சுற்றி
கோள்கள் ஒன்பதென
சூளுரைத்துச் சொன்னதிலிருந்தது
வானியல் தொலைநோக்கு.
காய்களையும் கறிகளையும்
அதனதன் பண்புணர்ந்து
சரியான சேர்ப்புடன்
சரிவிகத உணவாய் அளித்ததில்
உணவே மருந்தானது.
சுக்கும் மிளகும் திப்பிலியோடு அரைபட‌
வாஞ்சையோடு வழங்கப்பட்ட
கசாயங்களிடம் கட்டாயம் தோல்வியுறும்
அதிநவீன மருந்துகள்.
ரசாயங்களை விஞ்சும்
சாணக் கரைசலை மருந்தாக்கி
வீட்டு வாயிலில் தெளிப்பதில்
நுழையாதிருந்தன நுண்கிருமிகள்.
இவ்வாறாக‌
ஆயிரமாயிரமாய் இருந்தன‌
அறிவியலின் விழுமியங்கள்
'அ'ன்னா 'ஆ'வன்னா அறிந்திடாத‌
முன்னோர்களின் மூளைகளில்
.

பாவையர் மலர்- பிப்ரவரி 2012 இதழுக்காக நடத்திய "அறிவியல் ஆயிரம்"
கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை.

Wednesday, February 15, 2012
விரைவில் வெளிவருகிறது
கவிஞர் ச.கோபிநாத்தின்
புதிய ஹைக்கூ நூல்

வாழ்வை சாதாரணமாய் கடந்து செல்லும் நம்மை சிந்திக்கவும்
அதன் அழகியலை உணரவும் செய்யும் ஹைக்கூ கவிதைகள்...


வாசிக்க சில....

*
புத்தகத்தில் இருப்பதை
மூளையில் ஏற்று
மெக்காலே முறை

*
நிலா
முற்றம்
ஏக்கத்தில் குழந்தைகள்


வாசகன் பதிப்பக வெளியீடு


நட்பின் அரிதாரம்

பச்சையம் தவிர்க்கும்
கலப்பின தாவரமென
விலக்க முயல்கிறேன்
உன்னோடு வாய்த்த என தந்த பொழுதுகளை.

கண்ணுக்கு புலப்படும் தொலைவில்
நிராதரவுற்று நிற்கும் தனிமை
வெம்மையின் கணைகளை தொடுத்தபடி
சுமைகூட்டிக் கொண்டிருக்கிறது
கனத்திருந்த மனப்பரப்பை.

சங்கடங்களினூடே
குற்றவுணர்வுகளால் ததும்புகிறது
தளர்வை புறந்தள்ளி
இறுக்கமுற்ற இதயம்
நிரந்தரமின்மைகளின்
சுவடுகளை தொட்டசைத்தவாறு
பற்றிக் கொள்ள முயலும்
எனதான கரங்களை உதறியபடி
துகளென துளிர்த்து
கடலென பெருக முயல்கிறது
அகோரப் பசியுற்றிருக்கும்
என் மீதான உன் பகைமை
நட்பின் அரிதாரம் பூசி.

ச.கோபிநாத்

நன்றி : வடக்கு வாசல் இணையதளம்

Friday, February 10, 2012


என் இரவுகளின் நீளத்தை
அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன‌
உன்னுடனான என் பொழுதின் நினைவுகள்.
அசைபோடப்படும் நினைவுகள்
உறுத்தலையும் சங்கடங்களையும்
பரிசாக அளிக்கின்றன.
பரிசு மகிழ்வோடு 
ஏற்றுக்கொள்ளப்படாதவையெனினும்
அதை விரும்ப எத்தனிக்கிறது
நினைவுகளை மீண்டும்
நெஞ்சில் நிறுத்த முயலும் விருப்பம்.

ச.கோபிநாத்