Tuesday, May 12, 2009

உன்னுடையதான அறை

தனிமையில் திளைத்திருந்த வேளையில்
யதார்த்தமாய நுழைய நேரிட்டது
உனது அறையில்.

முரண்பாடுகள் நிறைந்த‌
உனது தூக்கத்தை
அறையின் மெத்தைவிரிப்புகள்
அடையாளப்படுத்தின.

அந்தரங்கம் தொனித்து காணப்பட்ட‌
உனது ஆடைகள்
கண்டறியாத பலவற்றை
உயிர்ப்பித்தன.

உன் இதழ்களின் இனிமையை சுட்டிக்காட்ட
ஒற்றை துளி தேநீர் மட்டும்
ஒட்டிக் கொண்டிருந்தது
தேநீர் கோப்பையில்
எனக்காக...

ரசனை மிகுந்த
உனது வாசிப்புகளை
அடையாளம் காட்டின‌
விரிந்து கிடந்த புத்தகங்கள்.

உன்னோடு வாய்க்காத பொழுதை
உனதான நினைவுகளோடும்
நிஜங்களோடும்
உயிர்பித்து உணர்ந்தேன்
உனது அறையில்....
நானும் அதுவும்

அங்கும் இங்குமாய் அலைந்து
ஓரிடத்தில் தஞ்சம் புகுந்துவிடுகின்றது அது.
வெகு சீக்கிரத்தில்
ஒட்டிக் கொள்வதில்லையெனினும்
முயற்சித்தபடி இருக்கிறது.
கீச்சலிட்டும் குளைத்தும்
பயப்படுவதாய் அடையாளப்படுத்த முயன்றாலும்
எனக்கிடையேயான அதன் முதல் சந்திப்பில்
காலங்களையும் வெளிகளையும் கடந்து
மெல்ல நுழைந்து
இடம் அம்ர்ந்து கொண்டேன் அதனுலகில்
விடையளிக்க இயலாதெனினும்
பலவற்றை பகிர்ந்து கொள்கிறேன்
எனதான சினேகம் என்றெண்ணி அதனுடன்.
என்றேனும் சபிக்க நேரும் அக்கணத்தில்
எல்லைக்கடந்து திட்ட நேரும்
அதனுடனான உறவினை புறந்தள்ளி
''சீ, போ, நாயே....''' என்று
மனமுறுகி சூட்டி மகிழ்ந்து அழைத அதன்
செல்லப்பெயரையும் கடந்து.