Wednesday, June 16, 2010

அன்புள்ள அப்பாவுக்கு...

எதுவுமற்றபடி தென்படும்
எனதான கிறுக்கல்களை
ஓவியங்களென மெச்சி புகழ்வதில்
தொடங்குகிறது தந்தை உதிர்க்கும் பொய்கள்.

மூச்சிறைக்க மிதிபட்டு
மணியோசையினூடே இழைத்து தேயும்
மிதிவண்டி அறிந்திருக்கக்கூடும்
தந்தையின் பணிபளுவை....

அறியாப் பிள்ளையென செய்த தவறுகளுக்கு
பரிந்துரைத்ததில் தொடங்கி
பட்டதாரியென முகிழ்த்து நிற்கும்
எனதான வளர்ச்சிக்கு உரித்தான
அவரின் செயல்பாடுகளை
விசும்பல்களினூடே கடுகடுக்கும்
எனதுதடுகள் உமிழும் சொற்சுமைகள்.

குஞ்சுப்பறவைக்கு உணவூட்டி மகிழும்
தாய்ப்பறவையின் பகிர்தலையொத்தபடி
பிரியத்தின் சுனை நிரம்பி
வழிந்தோடும் அவருடைய தான ஸ்பரிசம்.

சூழ்ந்த மரங்களினூடே மலரும் வசந்தமென
படர்ந்த அக்கறையின் புனிதத்தை
துட்சமென தகர்த்த எனதுதடுகள்
கருணையின் வேடம் தரித்துமிழும்
என்ற வார்த்தைகளை...

ச.கோபிநாத்