Tuesday, December 6, 2011சேலத்தில் நடைபெற்ற குறுஞ்செய்தியாளர்கள் குடும்ப விழாவில் பேசும்போது...

Sunday, October 9, 2011

கவிஞர் ச. கோபிநாத்

சேலம் என்றாலே நினைவுக்கு வருவது மாம்பழம் தான் அதைப்போல இலக்கியம் என்றால் நினைவுக்கு வருவது சேலம் தான் என்று கூட சொல்லலாம் அந்த அளவுக்கு இந்த மாவட்டத்தில் பிரபலமான கவிஞர்களும் எழுத்தாளர்களும் . இங்கே குவிந்து கிடக்கிறார்க்ள்.

அந்த வரிசையில் இந்த மாத எழுத்தாளர் அறிமுகம் பகுதியில் வலம் வருபவர் கவிஞர் ச. கோபிநாத். கவிதை அலைவரிசைக்கு வார்த்தை வரம் கொடுக்கும் வித்தகர். தமிழ் நெஞ்சங்களில் கவிதை மழை பொழியும் கவி சக்கரவர்த்தி.

இந்த இளைய கவிஞருக்கு வயதென்னவோ இருபத்தி இரண்டுதான் ஆனால் அறிஞர் பெருமக்கள் அள்ளித்தந்த பட்டங்களும் விருதுகளும் நம்மை வியக்க வைக்கிறது கலைத்திலகம், யுவகலாபாரதி, சகலகலாவித்தகர், கலைத்துறைகருவூலம், முத்தமிழ்வித்தகர், சாதனையாளர், நகைச்சுவைஅரசு, கவித்தென்றல் இவையெல்லாம் இவர் பெற்றுள்ள விருதுகள் என்கிறபோது சற்று மலைப்புத்தான் தோன்றிவிடுகிறது.

தமிழ்மொழியை மட்டும் நேசிக்காமல் ஆங்கிலத்தையும் அறிந்துகொண்டு ஆங்கில ஆசிரியராக பணியாற்றிக்கொண்டு தமிழ் மொழியில் தரமான கவிதைகளைத்தர மனிதர்களை மதித்து, மனித மனங்களை நுகர்ந்து சைக்கிள் ஓட்டுவதற்கு பயிற்சியும் முயற்சியும் தேவை என்பதுபோல கவிதைக்களத்தில் நல்ல பயிற்சி பெற்று நல்ல முயற்சி உடையவர்தான் கவிஞர் ச. கோபிநாத்.

இவர் எழுதிய கவிதைகள் ஆனந்தவிகடன், குமுதம், குங்குமம், வடக்குவாசல், புன்னகை, பொதிகை மின்னல், இணையட்டும் இதயம், தமிழச்சி, பயணம், நீலநிலா, உயிர்த்துளி, மற்றும் குறுஞ்செய்திகள் இதழ்களிலும் வெளிவந்து பலரது பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறார்.

இதுதவிர கூட்டுமுயற்சியாக வெளிவந்த பல நூல்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. தூண்டுகோல், வசந்தவாசல் கவிச்சாரல், எழுத்துச்சிற்பிகள், புல்லாங்குழலின் பூபாளம், வசந்தவாசல் கவிப்பேழை, கவிஞர்கள் பார்வையில் அண்ணா, அண்ணா நானூறு, அன்பென்று எதனைச்சொல்ல, சிந்தனைவயல், ஹைக்கூ-500, சிந்தனைவயல்-2, வசந்தவாசல் கவிதைக்களஞ்சியம், சிந்தனைவயல்-3, வசந்தவாசல் கவிதைக்கடல் போன்ற நூல்களில் இவரது கவிதைகள் இடம்பெற்று இலக்கியத்திற்கு இரத்ததானம் செய்திருக்கிறார்.

இவர் கவிஞர் மட்டுமல்ல கேட்பவர்களின் இதயங்களை துயிலெழுப்பும் சிறந்த பேச்சாளரும்கூட, பட்டிமன்றங்களில், தொலைக்காட்சிகளில், உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் இவரது அனல் தெறிக்கும் பேச்சுக்கள் கேட்பவரை அசர வைக்கும், கருத்து தூவல்கள் இதயங்களை உரச வைக்கும் .

இவரது பேச்சில் தமிழ் இயற்கையாய் வந்துவிழும் ஒரு அருவியைப்போல வந்து விழும். விஜய் தொலைக்காட்சி நடத்திய ``தமிழ்பேச்சு எங்கள் மூச்சு என்ற தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களுக்கான தேடல் நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பேச்சாளர்களில் ஒருவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டும் சான்றிதழும் பெற்றிருக்கிறார்.

ஜி தமிழ் தொலைக்காட்சி நடத்தும் ஞாயிறுபட்டிமன்றம் நிகழ்ச்சியில் சிறந்த பேச்சாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டும் சான்றிதழும் பெற்றிருக்கிறார்.

பள்ளி கல்லூரி அளவிலான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி போன்ற போட்டிகளில் மாவட்டம் மாநிலம் மற்றும் அகில இந்திய அளவுகளில் பல பரிசுகள் பெற்றுள்ளார்.

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி சேலம் பெரியார் பல்கலைக்கழகம் அனைத்து கல்லூரி மாணவர்களுக்காக நடத்திய 800 மாணவர்கள் பங்கேற்ற பேச்சுப்போட்டியில் முதலிடம் பெற்று செம்மொழி மாநாட்டில் பங்கேற்றிருக்கிறார்.

ஆனந்தவிகடன் மாணவ பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின்கீழ் 2008-2009 ஆம் ஆண்டின் மாணவ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி திட்டத்தின் நிறைவில் மிகச்சிறந்த மாணவ பத்திரிகையாளர் எனும் சான்றிதழும் பெற்றிருக்கிறார்.

சிறந்த சிந்தனைச் சிற்பியான இவர் பல தன்னம்பிக்கை கட்டுரைகளை எழுதியிருக்கிறார். சேலம் மாநகரிலிருந்து வெளிவரும் தமிழச்சி இதழில் தன்னம்பிக்கை கட்டுரைத்தொடர் தொடர்ந்து எழுதிவருகிறார்.

சிறந்த கவிஞராக, சிறந்த எழுத்தாளராக, சிறந்த பேச்சாளராக ஜொலிக்கும் கவிஞர் ச.கோபிநாத் எதிர்காலத்தில் தரமான படைப்புகளைத்தந்து அவையெல்லாம் நூல்களாகி இலக்கியத்தில் இடம் பிடிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அவர் மேன்மேலும் வளர முதற்சங்கு மனதார வாழ்த்துகிறது.

கைபேசி : 9790231240

எழுத்தாளர் ஐரேனிபுரம் பால்ராசய்யா அவர்களால் எழுதப்பட்ட இந்த கட்டுரை முதற்சங்கு இதழின் எழுத்தாளர் அறிமுகம் பகுதியில் இடம்பெற்றது

Saturday, June 25, 2011
தீப்பெட்டி

தொடக்கங்களின் குறியீடென‌
தன்னை முன்னிறுத்தி கொண்டது வெளிச்சம்.
எனினும் ஆயிரக்கணக்கான‌ தீக்குச்சிகள்
மடிந்தபின்னரே சுடர்விட தொடங்கியது அதனிருப்பு.
எரிந்து கறுப்புத்துகள்கள் உதிர்க்கும்
தீக்குச்சிகளின் சடலங்களுடன்
துர்நாற்றம் வீசத்தொடங்கியது
தீப்பெட்டிகளுக்குள் தங்கள் புதைத்துக்கொண்ட‌
கந்தக சிறார்களின் வண்ணக் கனவுகள்.

ச.கோபிநாத்
சேலம்
9790231240

Sunday, May 22, 2011

அன்பின் பாடம்

யாருமில்லா வகுப்பறையில்
ஆசிரியர்களாகும் குழந்தைகளிடம்
அன்பின் பாடம் கற்கின்றன..
வகுப்பறை சுவர்களும்,
நாற்காலிகளும், மேசைகளும்!!


-கோபிநாத்,சேலம்.
9790231240


நன்றி
நந்தலாலா வலைப்பூ இதழ்

Thursday, May 12, 2011


மழைக்கு பிந்தைய
மாலை பொழுதில்
நீர் சொட்டும் இலைகளை சுமக்கும்
மரங்களின் அடியில் நின்றவாறு
விளையாட்டாய் கிளைகளை ஆட்டும்
குழந்தைகளின் மனதை
குதூகலப்படுத்தவே முத்தமழை பொழிகின்றன‌
பச்சையம் படர்ந்த‌ இலைகள்.

ச.கோபிநாத்

Thursday, April 28, 2011


கவனச்சிதறல்

நம்பிக்கை துளிர்க்கும் தருவாயில்
அதன் முனைகளை மழுங்கசெய்கிறது
உனது வார்த்தைகள்.
காதுகளை செயலிழக்க செய்து செவிடனாகி
முயன்று முன்னேறுகிறேன்
கண்களின் முன் சில செயல்கள் நிகழ்த்தி
மீண்டும் திசை திருப்ப முனைகிறாய்.
இப்போது கண்களை கட்டிக்கொண்டு
கண்ணிருந்தும் பார்வையற்றவனாகிறேன்.
தொடர்ந்து திசைதிருப்புகிறாய்
என் கவனத்தை நீ
தொடர்ந்து முயன்றுகொண்டிருக்கிறேன் நான்
தீர்மானமாய் உணர்ந்துகொண்டேன் நான்
திசைதிருப்புவதில் நீயும்
இலக்கின் உச்சம் அடைவதில் நானும்
நம்பிக்கையோடிருப்பதாய்.

நன்றி
வார்ப்பு இணையதளம்

Monday, April 25, 2011இன்னும் கொஞ்சம்
இன்னும் கொஞ்சமென
பாசம் பிணைக்க பரிமாறும்
அம்மாவின் அன்பிற்காகவே
மீண்டும் பசிக்க செய்கிறது
ஏற்கனவே நிறைந்த வயிறு.

ச.கோபிநாத்

Saturday, March 5, 2011வழிகாட்டும் குழந்தை
சாலையை கடக்கும் பார்வையற்றவர்
மலர்கிறது மனிதநேயம்

ச‌.கோபிநாத்

நன்றி : கே.கே.ஐ குறுஞ்செய்தி இதழ்விரிவடையும் சாலை
விழுங்கப்படும் விளைநிலங்கள்
வளர்ச்சிப்பாதையில் இந்தியா

ச‌.கோபிநாத்

நன்றி : வாலிதாசன் குறுஞ்செய்தி இதழ்

Wednesday, March 2, 2011
பேதைமை


அடர்வனமொன்றில்
இலைகளிடையே நுழைந்துத் தரைதொடும்
சூரியக் கதிர்களின் துணைக் கொண்டு தேடி அலைகிறேன்.
புலப்படாத புதருக்குள் சென்று மறைந்தவாறே
முகம்காட்டி என்னை அழைக்கிறது
நடையைத் துரிதப்படுத்த
ஓடியவாறே இருக்கிறது
பருத்தியென மேனிக்கொண்ட முயல்
கைகளுக்கு எட்டும் தூரத்திலிடிருந்தும்
அதன் போக்கில் விட்டு விளையாடித் தொடர்கிறேன்
ஏதுமறியா குழந்தையென.

ச.கோபிநாத்

நன்றி : வடக்கு வாசல் இதழ் மற்றும் இணையதளம்

Monday, February 28, 2011
வழியனுப்புதல்

"டாட்டா" காட்டுவதால்
பெரியதாய் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை
எனினும்,
ஏதோ இழந்தவாறு
உணர நேர்கிறது
"டாட்டா" காட்ட மறுத்தபடி
வழியனுப்பும் குழந்தையின் செய்கையால்..!

-ச.கோபிநாத்.

நன்றி
நீலநிலா வலைப்பூ மற்றும் இதழ்