Monday, December 15, 2008


துணை

காரணிகளேதுமின்றி
பிந்தொடர்கிறது நமதந்த உறவை

சிதைத்த பிணக்கங்கள்
வலியப் பேசுவது
நமதானவற்றை நாணமுறச்
செய்துவிடுமென்ற எண்ணத்தினூடே
கடக்கிறது நமதிந்த பிரிவு.

எனைவிடுத்து நீயும்

உனைவிடுத்து நானும்

பிரிந்திருக்கும் இக்கணம்

மெல்லக் கடக்கிறது

தனித்த அறையொன்றின் துணையுடன்.

Sunday, December 14, 2008


மழைக்காலப் பொழுது

கருத்த மேகங்களினூடே

துளிர்த்து பெருகும் மழையினை

தவிர்த்தொதுக்கி மேலெழுகிறது குடை.

எனக்குள் உறையும் உனதன்பையும்
உனதன்பை தாங்கிய உனதுள்ளத்தையும்
நனைவுற்றிடாமல் காக்கும் பொருட்டு...

வாக்குறுதிகள்

நமதிடையேயான நட்பை
விரிசலுற செய்தபடி
முகம்காட்டி மகிழ்வுறுகிறது

இளகமறுக்கும் இதயத்தை
சிதைவிறசெய்தபடி மேலெழும்பும்
நிறைவுறா வாக்குறுதிகள்

நம்பிக்கையின் தடம்

கழுகொன்றின் பார்வைக்கு

புலப்பட்ட சர்ப்பமென
போராட்டதினூடே கழிகிறது

எனதிந்த நாட்கள்
நாளைக்கேனும்....
என்றபடி கடந்த நேற்றை தகர்த்தபடி
இன்றும் நிகழ்கிறது
எனதந்த நம்பிக்கையின் தடம்
......

Friday, October 24, 2008


உனக்கான பொழுது

குரூரத்தின் நுரைத்ததும்பி வழியும் பகைமை
மறைத்தலின் பொருட்டு மேலெழும்பும் காமபகிர்வுடனான உனது பார்வை
கடலலையினின்று மேலெழும்பும்
அலைகளையொத்தபடி உயரும் உனதான நினைவுகள்
பிரிதலின் பொருட்டு
உனதுதடுகள் உமிழிந்த கசந்த வார்த்தைகள்
என சலனமற்று விட்டெறிந்த‌
உனதான பகிர்வுகளை மீண்டெழும்பியபடி
துளிர்த்து பெருகுகிறது வன்மம்.
இது குறித்து என்றைக்கேனும் உண்ருமுன்

விரிந்திருக்கும் உனதன்பை

இக்கண்மே வியாபித்துக் கொள்.


கண்ணீருடன் கசியும் துவேஷம்

வேறெக்கணத்திலும் நிகழா

எனதந்த ஸ்பரிசத்தினூடே

எஞ்சியிருக்கிறது எனதான பால்ய காலப்பொழுதுகள்.

செவிமடுக்கும் வார்த்தைகளின்
நெகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறது

எனதிந்தப் பொழுதின் இறுக்கம்.


மறைவிடமொன்றிலமர்ந்து

பதுங்கியபடி பாய்ந்தெழும்

எனதந்த நினைவுகளை உலுக்கியபடி

நெருங்கிவர காத்திருக்கிறது
பகைமையின் பொருட்டு
எனது தோழமைகள் துகிலுரித்த‌

நட்பின் துவேஷம்

விசும்பியபடி கசியும் கண்ணீர் துளிகளினூடே......

நன்றி : வடக்கு வாசல்


உனதந்த அசைவு

வேறெப்போதும்
நிகழ்ந்திரா கணத்தினூடே

மெல்ல நெருங்கி வருகையில்
விலகியபடி எத்தனிக்கிறது உனதுணர்வுகளை தாங்கிய காதல்.

இறுகப் பற்றிய கைகளின் வழியே கசிந்துருகும் பிரிவினைப்
புறந்தள்ளி
மேலெழுகிறது நமதிடையேயான ஏக்கம்.

கரையாத் துயரம் சுமந்த‌

நாளொன்றை விலக்க முனைகையில்
நினைவு கூறும் பொருட்டு
துரத்தி துரத்தி
அல்லலுறச் செய்கிறது

நமதிடையே நிகழ்ந்த பிரிவு.


அரவமற்று திரியும் தவிப்புகளை நீக்கி
தொடரலாமென்ற நம்பிக்கையின் முனையில்
முனைத்தெழுகையில்
மெளனித்தபடி துளிர்கிறது
உனதிமையோரத்தில் நீர்.

தனித்த பொழுதொன்றில்

இடுகாட்டு வழியொன்றின் இருண்மையினை சுமந்தபடி எஞ்சியிருக்கிறது வாழ்வின் நீட்சி.

தொடருமென்ற நம்பிக்கையுடன் மேலெழும்பி உயரும்
புனைவினை புறந்தள்ளி

வெளியேறும் விருப்பத்தில்

மிதக்கிறது மீண்டெழும் ஞாபகங்கள்.


மற்றெந்த பொழுதகளையும்விட‌
உன்னதமென உருப்பெறுகிறது
என்னுள் விரிந்திருக்கும்
வாழ்வின் வலிமை குறித்துணரும்

எனதந்தப் பொழுதுகள்.


தாளவியலா பதட்டத்தின் வேளையினூடே

வியாபித்தபடி எத்தனிக்கிறது
மனதின் மூளையொன்றில் முளைத்து

களிப்போடு வெளியேறும்

எனதந்த தனிமை.....

ஏமாற்றம்.

மெளனம் சுமந்த‌
குளத்தில் கல்லொன்று விழ‌

நிசப்தம் கலைந்தது

சப்திருந்த நீர்.

என்னுடையதான காதலையும்

காதல் சார்ந்த நினைவுகளையும்
சுமந்தபடி பிரகாசிக்கிறது
குளத்தங்கரை படிகள்.

என் தாத்தாவின் இறப்பின் போது
கரைத்த அஸ்தியின் சுவடுகளில்
தொனித்து தென்படுகிறது

குளத்தங்கரை சோகம்.

மகிழ்ச்சியின் விளிம்புகளையும்
சோகத்தின் எல்லைகளையும்
சுமந்த குளத்தங்கரையை காண்கையில்

இப்போதும் மகிழ்ச்சி கொள்ளும் மனம்.

குளத்து நீரில் மூழ்கி குளித்த நான்
நீண்டு நெடிந்த இடைவெளிக்கு பின்
அது சார்ந்த நினைவுகளில் மூழ்கி திளைக்க‌
எங்கிருந்தோ பறந்து வந்த
காகமொன்று
தன் தாகத்தை
தீர்க்கும் பொருட்டு

குளத்தை எட்டிப்பார்க்க‌

வறட்சியுற்ற குளத்தைக் கண்டு
ஏமாந்தது காகம்
என்னுடன்......

அன்புள்ள அப்பாவுக்கு...

எதுவமற்றபடி தென்படும்

எனதான கிறுக்கல்களை

ஓவியங்களென மெச்சி புகழ்வதில்
தொடங்குகிறது தந்தை உதிர்க்கும் பொய்கள்

மூச்சிறைக்க மிதிப்பட்டு
மணியோசையினூடே இழைத்துத் தேயும்

மிதிவண்டி அறிந்திருக்கக்கூடும்
தந்தையின் பணிப்பளுவை.....

அறியாப் பிள்ளையென செய்த தவறுகளுக்கு

பரிந்துரைத்ததில் தொடங்கி

பட்டதாரியென முகிழ்த்து நிற்கும்
எனதான வளர்ச்சிக்கு உரித்தான‌
அவரின் செயல்பாடுகளை

விசும்பல்களினூடே கடுகடுக்கும்

எனதுதடுகள் உமிழும் சொற்சுமைகள்.

குஞ்சுப்பறவைக்கு உணவூட்டி மகிழும்
தாய்ப்பறவையின் பகிர்தலையொத்தபடி
பிரியத்தின் சுனை நிரம்பி
வழிந்தோடும் அவருடையதான ஸ்பரிசம்.


சூழ்ந்தமரங்களினூடே மலரும் வசந்தமென‌
படர்ந்த அக்கறயின் புனிதத்தை

துட்சமென தகர்த்த எனதுதடுகள்

கருணையின் வேடம் தரித்துமிழும்
''அன்புள்ள அப்பாவுக்கு.........''

என்ற வார்த்தைகளை.

நிஜ உலக நாயகர்கள்

நீண்ட வரிசையின் நிதானிப்பில்
மெல்ல நகர்கிறது

திரையரங்க வாயிலில்
ரசிகர்களின் பெருங்கூட்டம்!

மாத வருமானத்தின் மகத்தான பகுதியை திரையரங்க நுழைவுச்சீட்டு விழுங்கிவிட அறிவிக்க இயலா உணர்வுகளை
அசைபோட்டுப் பார்க்கும் மனம்!

எல்லை மீறிய ரசிகனின் போற்றுதலுக்கு
எடுத்துக்காட்டாக வானுயர நிற்கும்
நாயகனின் நிழலுருவத்திற்கு
அபிஷேகப்படுத்தப்டுகிறது

பல குடங்களில் வெறுமையை நிரப்பிய பால்!

நிலைபெற்று நிற்கும் உன்னதத்தைத் தொலைத்த
நிஜ உலக நாயகர்கள்

தங்களின் வெற்றியை தொலைத்த

எதிர்காலத்தை எதிர்பார்த்தபடி
கண்டுமகிழ்கின்றனர்
நிழலுலக நாயகனை......!

நன்றி : புன்னகை

கடிதம்

உன் கைவண்ணத்திலான‌
ஆயிரம் தகவல்களை பெற்றுவிட்டேன்
மின்னஞ்சல் வழியிலும்
அடிக்கடி அச்சுறுத்தும்
அலைபேசி வழி
குறுஞ்செய்திகளிலும்......

எனினும், எவையும் உயிர்ப்பிக்கவில்லை
நமதான நட்பை
உன் கையெழுத்தைத் தாங்கிய‌

கடிதத்தைப் போன்று.....

- இனிய நந்தவனம். (பிப்ரவரி‍-2009)

Thursday, October 23, 2008


சொற்கள் மீதான எதிர்பார்ப்பு்

எல்லோரை குறித்தும் படுயதார்த்தமாய் உரசி பார்க்கிறது உனது சொற்கள்.

விருப்பப்பட்டவைகளையும் விரும்பாதவைகளையும் மிக எளிதாய் விமர்சிக்கின்றன‌ உனது எண்ணங்கள்.

உதடுகளுக்கிடையே துளிர்க்கும் காற்றுவெளியில் கலந்துவிட்டபடி
எல்லோரும் இடம்பெற்றிருக்க

என்னை குறித்த உனது வெளிப்பாட்டை
எதிர்ப்பார்த்தபடி எத்தனிக்கிறது எனது மனம்.

எறுபுகளின் அணிவகுப்பையொத்தபடி
வரிசையாய் கட்டவிழ்ந்த‌

உனது சொற்களுக்குள்
வாழ்க்கைக் குறித்து எல்லாம் தொனித்திருக்க‌
உன்னையே வாழ்க்கையென‌ நினைத்துருகும்
என்னை குறித்து எதிர்ப்பார்த்து

ஒன்றுமற்றபடி ஏமாந்தது எனதிதயம்.

கோழிக் குழம்பு வாசனை

அதிகாலை தூக்கத்தை கலைத்த‌
எங்களின் விழிப்புகளுக்கெல்லாம்
உரித்தான சேவல் அறிந்திராது
அதன் வாழ்வின் இறுதி நாளை...

மூலைத்தெரு முனீஸ்வரனுக்கு
பலி கொடுக்கும் நாள்வரைக்கும்
சுற்றித்த்ரிந்ததென்னவோ
எங்களைத்தான்....

நிதர்சனப்பட்ட அதன் நினைவுகள்
மனக்கண்முன் ஓடிக்கொண்டிருக்க‌
பொங்கி வலிந்த‌
குருணை அரிசிச்சோற்றின் வாசனையிலும்
கொதித்து அடங்கிய கோழிக்குழம்பின் வாசனையிலும்
அடங்கிப் போனது
சேவலும் அது சார்ந்த நினைவுகளும்....

நன்றி : குங்குமம்