Saturday, April 27, 2013


பட்டாம்பூச்சிகளின் கனவுகள்- ஓர் பார்வை
கவிஞர் பொன் குமார்

ஹைக்கூ ஆர்ப்பாட்டமின்றி வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஆலமரம் போல வேரூன்றி அகல கிளை விரித்து மண்ணில் விழுதுகளையும் இறாக்கி தனக்கென ஓரிடத்தையும் பிடித்து கவிதை உலகில் தனித்து காணப்படுகிறது. ஹைக்கூ உலகிற்கும் புதிதாக வரவுகள் இருந்து கொண்டே உள்ளன. கவிஞர் நிலா ரசிகன் எழுதிய ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள் தொகுப்பை நண்பர் சி. வெங்கடேஷ் தர சொன்னதாக சேலம் கோபிநாத் 17.07.2008 அன்று என்னிடம் சேர்பித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 2011 ஆம் ஆண்டு இறுதியில் ஒருவை உதிர்த்துவிட்டு பட்டாம்பூச்சிகளின் கனவுகள் தொகுப்பை தந்தது. முன்னது புதுக்கவிதைத் தொகுப்பு. பின்னது ஹைக்கூ. பட்டாம்பூச்சிகளின் கனவுகளுடன் ஹைக்கூ உலகில் காலடி எடுத்து வைத்திருப்பவர் சேலம் ச. கோபிநாத். சாதிக்க வேண்டும் என்னும் வேட்கை உடையவர். எழுத்தில் மட்டுமன்றி பேச்சிலும் வல்லவர்.

கோவில் என்பது புனிதமான இடம் என்பர். மன அமைதிக்காக மக்கள் கோவில் செல்வதும் வழக்கம். ஆனால் இன்று கோவிலே கலவர பூமியாகி விட்டது. கோவிலிலேயே கொலை நிகழ்த்தப்படுகிறது. 

கோவில் வாசலில்
இரத்த சுவடுகள்
அன்பே கடவுள்?
கோவிலில் கறை படிந்துள்ளது என்கிறார். அன்பே கடவுள் என்பது மெய்யா என்கிறார். கடவுள் இருப்பது உண்மையானால் இரத்தச் சுவடுகள் ஏற்படாது என்கிறார்.

இன்றைய அவசர உலகம் அலைபேசி உலகம் ஆகிவிட்டது. அலைபேசி இல்லாத மனிதரே இல்லை என்றாகிவிட்டது. அழைப்புவிடுத்து அழைத்து பேசுபவரைவிட அழைப்புகளை தவறச் செய்து பேசச் செய்பவரே மிகுதி. தவறிய அழைப்புகளால் மனத்தில் ஏற்படும் அலைகள் அதிர்வுகளை உண்டாக்கும். பதற்றத்தை ஏற்படுத்து.
எண்ணற்ற எதிர்பார்ப்புகளை
இதயத்தில் எழுப்புகிறாது
தவறிய அழைப்புகள்
தவறிய அழைப்புகளால் இதயத்தில் எதிர்பார்ப்புகள் ஏற்படுவது இயல்பு. அதை ஹைக்கூவாக்கியுள்ளார். அதிர்வுகளை இதயத்தில் எழுப்பியுள்ளார்.

குழந்தைகள் சேமிக்கும் உண்டியல்
பதம் பார்க்கத் துடிக்கிறது
சாமானியரின் மாத இறுதி நாட்கள்
ஹைக்கூ வடிவத்தைத் தாண்டி இருந்தாலும் கருப்பொருளில் சிறந்து விளங்குகிறது. ஒரு சராசரி குடும்பத்தின் நிலையை எடுத்துக் காட்டியுள்ளார். குழந்தைகளைச் சேமிக்கக் கற்று கொடுத்தாலும் வறுமை விடாது என்கிறார்.

பகலில் சூரியன்
இரவில் நிலா
தங்கிட ஒரே கிணறு
பொன்.குமார் எழுதிய இந்த ஹைக்கூ பரவலாக பேசப்பட்டது. ஹைக்கூவில் ஒரே மாதிரி அமைந்து விடுவது உண்டு. ஹைக்கூவில் மட்டும் நடக்கும் விபத்து இது. சில வேளைகளில் ஒரே மாதிரி ஒத்த சிந்தனையில் அமைவதும் உண்டு. கவிஞரின் சிந்தனை சற்றே மாறுபடுகிறது.
பகலில் சூரியன்
இரவில் சந்திரன்
பகுதி நேரப் பணி
சூரியனும் சந்திரனும் பகுதி நேரப் பணியாற்றுகிறார்கள் என்கிறார். ரசிக்கச் செய்கிறார்.

ஒரு மனிதன் வாழ்ந்ததற்கு அடையாளமாக ஒரு வீடு கட்டியிருக்க வேண்டும் என்பர். ஒரு நூல் வெளியிட்டிருக்க வேண்டும் என்பர் அல்லது ஒரு மாம் நட்டிருக்க வேண்டும் என்பர். குறைந்தபட்சம் மூன்றில் ஒன்றாவது  நிறைவேற்றியிருக்க வேண்டும். கவிஞர் மூன்றும் தேவை என்கிறார்
புவி காக்க மரமும்
அறிவு வளர்க்க நூலகமும்
வீடு தோறும் தேவை
வீடு இருந்தாலே மரமும் வளர்க்க முடியும் நூலகமும் வைக்க முடியும். முதலில் வீடு அவசியம் என்கிறார். கவிஞரின் சுற்றுச் சூழல் ஆர்வம் நூல் வாசிக்க வேண்டும் என்னும் உணர்வும் ஒரு சேர வெளிப்பட்டுள்ளது.


ஒரு கவிஞனுக்கு சமூக அக்கறையுடன் சம கால பார்வையும் அவசியம். சமகால பிரச்சனையாக உருவெடுத்து முன்னிற்பது மின்சாரம். மக்களின் தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி இல்லை. இதனால் நீடிக்கிறது பற்றாக்குறை. தேவையும் பற்றாக்குறையும் அதிகரித்து கொண்டே போவதால் இடை வெளியும் அதிகரித்து கொண்டேயுள்ளாது.
தொடரும் மின்வெட்டு
மீட்டுருவாக்கம் பெறுகிறது
அம்மியும் உரலும்
மின்வெட்டால் மீண்டும் மக்கள் பழைய வாழ்க்கைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது என்கிறார். வரலாற்றில் ஒரு இருண்ட காலம் இருந்தது என்பர். அது வேறு. தற்போது ஊர் இருண்ட காலம் உருவாகி வருகிறது. இதுவும் வரலாற்றில் இடம் பெறும்.

மரங்களில்லா நிலம்
கைப்பேசி கோபுரத்தில்
குருவிக்கூடு
மரங்கள் வெட்டப்பட்டதால் மக்கள் அமைத்த கைப்பேசி கோபுரத்தால் குருவிகள் கூடு கட்டி வாழ்கின்றன என்கிறார். குருவியின் மீதான் அக்கறை. ஆனால் இதில் பொருள் பிழை உள்ளது. கைப்பேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டதால் அதிலிருந்து வெளிப்படும் அதிர்வுகளைத் தாங்க முடியாமல் குருவிகள் நகரிலேயே இல்லை எந்பது தான் உண்மை. கவிதையில் கற்பனை இருக்கலாம். ஹைக்கூவில் மெய் இருக்க வேண்டும். எப்போதும் பொய்யிருக்கக் கூடாது.

திருநங்ககைகளைப் பற்றிய ஒரு ஹைக்கூ குறிப்பிடத்தக்கதாயுள்ளது.
பிழையாய் பிறப்பு
வளர்பிறையாய் வாழ்வு
சாதிக்கும் திருநங்கைகள்
திருநங்கைகள் பிழையாய் பிறப்பதில்லை. உடலில் ஏற்படும் மாற்றமே அவர்களை அரவாணியாக்குகிறது. ஆயினும் அரவாணிகளுக்காக குரல் கொடுத்துள்ளார். அரவாணிகள் சாதித்து வருகிறார்கள் என போற்றியுள்ளார்.
தளர்ந்த நடை
ஊன்று கோலாய் நம்பிக்கை
சாதிக்கும் மாற்றுத் திறனாளிகள்
மாற்றுத் திறனாளிகளையும் போற்றியுள்ளார். மற்றவர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.

சேலம் ச.கோபிநாத் அவர்களுக்கு ஹைக்கு நன்றாக வருகிறது. மூன்று வரியில் எழுதுவது என்பதை விட அதற்குள் எதையாவது, எப்படியாவது சொல்லி விட வேண்டும் என்னும் எண்ணம் அவரிடம் மிகுதியாகவே உள்ளது. பட்டாம்பூச்சிகளின் கனவுகள் தொகுப்பின் சுட்டிக் காட்டும் படியான ஹைக்கூக்கள் பல உள்ளன. அவைகளில் சில
அம்மாவின் அரவணைப்பில்
அழுகையை நிறுத்தும் குழந்தைகள்
ஏமாற்றத்தில் பொம்மைகள்

சுட்டுக் கொல்லப்பட்டது
சமாதானப் புறா
சுதந்திர நாடு

பரிதவிக்கும் அரசியல்வாதிகள்
பாடம் புகட்டும் மக்கள்
ஆயுதமானது 49ஓ

விலகும் இதயங்கள்
வீணாகும் வாழ்க்கை
விவாகரத்து கோரிக்கை

இறந்து கிடக்கும் மனிதன்
கடந்து செல்லும் மனிதர்கள்
நாற்றமெடுக்கிறது மனிதம்

பட்டாம்பூச்சிகளின் கனவுகள் தொகுப்பில் கவிஞர் சேலம் ச. கோபிநாத்தின் கனவுகள் ஹைக்கூகளாக வெளிப்பட்டுள்ளன. முதல் முயற்சி என்பதால் முழு வெற்றி பெற முடியவில்லை. சிலவற்றிற்கு திருத்தம் தேவைப்படுகிறது. சிலவற்றிற்கு சுருக்கம் தேவைப்படுகிறது. ஒரே பாடுபொருளில் ஒன்றுக்கும் மேற்பட்டவை சலிப்பை ஏற்படுத்துகின்றன. ஹைக்கூ உலகில் கவிஞர் பிரவேசித்திருப்பது வரவேற்பிற்குரியது. ஹைக்கூ மீதான அவரின் ஆர்வத்தை அறிய முடிகிறது. கவிஞரிடமிருந்து பல நல்ல ஹைக்கூக்கள் வெளிப்படும் என்று நம்பிக்கையும் ஏற்படுகிறது. கவிஞரின் ஹைக்கூக் கனவுகள் தொடரவும் வெற்றி பெறவும் வாழ்த்துகள்.

விமர்சனம்
கவிஞர் பொன்.குமார்
சேலம்-6
9003344742

நூலாசிரியர்
கவிஞர் ச. கோபிநாத்
27/12 அம்மாப்பேட்டை சாலை
பாவடி பெண்கள் பள்ளி எதிரில்
சேலம் – 636001
பேச - 9790231240

நூல்             : பட்டாம்பூச்சிகளின் கனவுகள்
வெளியீடு        : கலைவாணித் தமிழ்க்கூடம், காரைக்குடி
விலை           : ரூ. 20
நூல் தேவைக்கு : கவிஞர். ச. கோபிநாத், சேலம்

No comments:

Post a Comment