Saturday, April 27, 2013


பட்டாம்பூச்சிகளின் கனவுகள்- ஓர் பார்வை
கவிஞர் பொன் குமார்

ஹைக்கூ ஆர்ப்பாட்டமின்றி வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஆலமரம் போல வேரூன்றி அகல கிளை விரித்து மண்ணில் விழுதுகளையும் இறாக்கி தனக்கென ஓரிடத்தையும் பிடித்து கவிதை உலகில் தனித்து காணப்படுகிறது. ஹைக்கூ உலகிற்கும் புதிதாக வரவுகள் இருந்து கொண்டே உள்ளன. கவிஞர் நிலா ரசிகன் எழுதிய ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள் தொகுப்பை நண்பர் சி. வெங்கடேஷ் தர சொன்னதாக சேலம் கோபிநாத் 17.07.2008 அன்று என்னிடம் சேர்பித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 2011 ஆம் ஆண்டு இறுதியில் ஒருவை உதிர்த்துவிட்டு பட்டாம்பூச்சிகளின் கனவுகள் தொகுப்பை தந்தது. முன்னது புதுக்கவிதைத் தொகுப்பு. பின்னது ஹைக்கூ. பட்டாம்பூச்சிகளின் கனவுகளுடன் ஹைக்கூ உலகில் காலடி எடுத்து வைத்திருப்பவர் சேலம் ச. கோபிநாத். சாதிக்க வேண்டும் என்னும் வேட்கை உடையவர். எழுத்தில் மட்டுமன்றி பேச்சிலும் வல்லவர்.

கோவில் என்பது புனிதமான இடம் என்பர். மன அமைதிக்காக மக்கள் கோவில் செல்வதும் வழக்கம். ஆனால் இன்று கோவிலே கலவர பூமியாகி விட்டது. கோவிலிலேயே கொலை நிகழ்த்தப்படுகிறது. 

கோவில் வாசலில்
இரத்த சுவடுகள்
அன்பே கடவுள்?
கோவிலில் கறை படிந்துள்ளது என்கிறார். அன்பே கடவுள் என்பது மெய்யா என்கிறார். கடவுள் இருப்பது உண்மையானால் இரத்தச் சுவடுகள் ஏற்படாது என்கிறார்.

இன்றைய அவசர உலகம் அலைபேசி உலகம் ஆகிவிட்டது. அலைபேசி இல்லாத மனிதரே இல்லை என்றாகிவிட்டது. அழைப்புவிடுத்து அழைத்து பேசுபவரைவிட அழைப்புகளை தவறச் செய்து பேசச் செய்பவரே மிகுதி. தவறிய அழைப்புகளால் மனத்தில் ஏற்படும் அலைகள் அதிர்வுகளை உண்டாக்கும். பதற்றத்தை ஏற்படுத்து.
எண்ணற்ற எதிர்பார்ப்புகளை
இதயத்தில் எழுப்புகிறாது
தவறிய அழைப்புகள்
தவறிய அழைப்புகளால் இதயத்தில் எதிர்பார்ப்புகள் ஏற்படுவது இயல்பு. அதை ஹைக்கூவாக்கியுள்ளார். அதிர்வுகளை இதயத்தில் எழுப்பியுள்ளார்.

குழந்தைகள் சேமிக்கும் உண்டியல்
பதம் பார்க்கத் துடிக்கிறது
சாமானியரின் மாத இறுதி நாட்கள்
ஹைக்கூ வடிவத்தைத் தாண்டி இருந்தாலும் கருப்பொருளில் சிறந்து விளங்குகிறது. ஒரு சராசரி குடும்பத்தின் நிலையை எடுத்துக் காட்டியுள்ளார். குழந்தைகளைச் சேமிக்கக் கற்று கொடுத்தாலும் வறுமை விடாது என்கிறார்.

பகலில் சூரியன்
இரவில் நிலா
தங்கிட ஒரே கிணறு
பொன்.குமார் எழுதிய இந்த ஹைக்கூ பரவலாக பேசப்பட்டது. ஹைக்கூவில் ஒரே மாதிரி அமைந்து விடுவது உண்டு. ஹைக்கூவில் மட்டும் நடக்கும் விபத்து இது. சில வேளைகளில் ஒரே மாதிரி ஒத்த சிந்தனையில் அமைவதும் உண்டு. கவிஞரின் சிந்தனை சற்றே மாறுபடுகிறது.
பகலில் சூரியன்
இரவில் சந்திரன்
பகுதி நேரப் பணி
சூரியனும் சந்திரனும் பகுதி நேரப் பணியாற்றுகிறார்கள் என்கிறார். ரசிக்கச் செய்கிறார்.

ஒரு மனிதன் வாழ்ந்ததற்கு அடையாளமாக ஒரு வீடு கட்டியிருக்க வேண்டும் என்பர். ஒரு நூல் வெளியிட்டிருக்க வேண்டும் என்பர் அல்லது ஒரு மாம் நட்டிருக்க வேண்டும் என்பர். குறைந்தபட்சம் மூன்றில் ஒன்றாவது  நிறைவேற்றியிருக்க வேண்டும். கவிஞர் மூன்றும் தேவை என்கிறார்
புவி காக்க மரமும்
அறிவு வளர்க்க நூலகமும்
வீடு தோறும் தேவை
வீடு இருந்தாலே மரமும் வளர்க்க முடியும் நூலகமும் வைக்க முடியும். முதலில் வீடு அவசியம் என்கிறார். கவிஞரின் சுற்றுச் சூழல் ஆர்வம் நூல் வாசிக்க வேண்டும் என்னும் உணர்வும் ஒரு சேர வெளிப்பட்டுள்ளது.


ஒரு கவிஞனுக்கு சமூக அக்கறையுடன் சம கால பார்வையும் அவசியம். சமகால பிரச்சனையாக உருவெடுத்து முன்னிற்பது மின்சாரம். மக்களின் தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி இல்லை. இதனால் நீடிக்கிறது பற்றாக்குறை. தேவையும் பற்றாக்குறையும் அதிகரித்து கொண்டே போவதால் இடை வெளியும் அதிகரித்து கொண்டேயுள்ளாது.
தொடரும் மின்வெட்டு
மீட்டுருவாக்கம் பெறுகிறது
அம்மியும் உரலும்
மின்வெட்டால் மீண்டும் மக்கள் பழைய வாழ்க்கைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது என்கிறார். வரலாற்றில் ஒரு இருண்ட காலம் இருந்தது என்பர். அது வேறு. தற்போது ஊர் இருண்ட காலம் உருவாகி வருகிறது. இதுவும் வரலாற்றில் இடம் பெறும்.

மரங்களில்லா நிலம்
கைப்பேசி கோபுரத்தில்
குருவிக்கூடு
மரங்கள் வெட்டப்பட்டதால் மக்கள் அமைத்த கைப்பேசி கோபுரத்தால் குருவிகள் கூடு கட்டி வாழ்கின்றன என்கிறார். குருவியின் மீதான் அக்கறை. ஆனால் இதில் பொருள் பிழை உள்ளது. கைப்பேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டதால் அதிலிருந்து வெளிப்படும் அதிர்வுகளைத் தாங்க முடியாமல் குருவிகள் நகரிலேயே இல்லை எந்பது தான் உண்மை. கவிதையில் கற்பனை இருக்கலாம். ஹைக்கூவில் மெய் இருக்க வேண்டும். எப்போதும் பொய்யிருக்கக் கூடாது.

திருநங்ககைகளைப் பற்றிய ஒரு ஹைக்கூ குறிப்பிடத்தக்கதாயுள்ளது.
பிழையாய் பிறப்பு
வளர்பிறையாய் வாழ்வு
சாதிக்கும் திருநங்கைகள்
திருநங்கைகள் பிழையாய் பிறப்பதில்லை. உடலில் ஏற்படும் மாற்றமே அவர்களை அரவாணியாக்குகிறது. ஆயினும் அரவாணிகளுக்காக குரல் கொடுத்துள்ளார். அரவாணிகள் சாதித்து வருகிறார்கள் என போற்றியுள்ளார்.
தளர்ந்த நடை
ஊன்று கோலாய் நம்பிக்கை
சாதிக்கும் மாற்றுத் திறனாளிகள்
மாற்றுத் திறனாளிகளையும் போற்றியுள்ளார். மற்றவர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.

சேலம் ச.கோபிநாத் அவர்களுக்கு ஹைக்கு நன்றாக வருகிறது. மூன்று வரியில் எழுதுவது என்பதை விட அதற்குள் எதையாவது, எப்படியாவது சொல்லி விட வேண்டும் என்னும் எண்ணம் அவரிடம் மிகுதியாகவே உள்ளது. பட்டாம்பூச்சிகளின் கனவுகள் தொகுப்பின் சுட்டிக் காட்டும் படியான ஹைக்கூக்கள் பல உள்ளன. அவைகளில் சில
அம்மாவின் அரவணைப்பில்
அழுகையை நிறுத்தும் குழந்தைகள்
ஏமாற்றத்தில் பொம்மைகள்

சுட்டுக் கொல்லப்பட்டது
சமாதானப் புறா
சுதந்திர நாடு

பரிதவிக்கும் அரசியல்வாதிகள்
பாடம் புகட்டும் மக்கள்
ஆயுதமானது 49ஓ

விலகும் இதயங்கள்
வீணாகும் வாழ்க்கை
விவாகரத்து கோரிக்கை

இறந்து கிடக்கும் மனிதன்
கடந்து செல்லும் மனிதர்கள்
நாற்றமெடுக்கிறது மனிதம்

பட்டாம்பூச்சிகளின் கனவுகள் தொகுப்பில் கவிஞர் சேலம் ச. கோபிநாத்தின் கனவுகள் ஹைக்கூகளாக வெளிப்பட்டுள்ளன. முதல் முயற்சி என்பதால் முழு வெற்றி பெற முடியவில்லை. சிலவற்றிற்கு திருத்தம் தேவைப்படுகிறது. சிலவற்றிற்கு சுருக்கம் தேவைப்படுகிறது. ஒரே பாடுபொருளில் ஒன்றுக்கும் மேற்பட்டவை சலிப்பை ஏற்படுத்துகின்றன. ஹைக்கூ உலகில் கவிஞர் பிரவேசித்திருப்பது வரவேற்பிற்குரியது. ஹைக்கூ மீதான அவரின் ஆர்வத்தை அறிய முடிகிறது. கவிஞரிடமிருந்து பல நல்ல ஹைக்கூக்கள் வெளிப்படும் என்று நம்பிக்கையும் ஏற்படுகிறது. கவிஞரின் ஹைக்கூக் கனவுகள் தொடரவும் வெற்றி பெறவும் வாழ்த்துகள்.

விமர்சனம்
கவிஞர் பொன்.குமார்
சேலம்-6
9003344742

நூலாசிரியர்
கவிஞர் ச. கோபிநாத்
27/12 அம்மாப்பேட்டை சாலை
பாவடி பெண்கள் பள்ளி எதிரில்
சேலம் – 636001
பேச - 9790231240

நூல்             : பட்டாம்பூச்சிகளின் கனவுகள்
வெளியீடு        : கலைவாணித் தமிழ்க்கூடம், காரைக்குடி
விலை           : ரூ. 20
நூல் தேவைக்கு : கவிஞர். ச. கோபிநாத், சேலம்

Sunday, March 24, 2013




தாயுமானவனின் சிந்தனையாக மலர்ந்த ஹைக்கூக்கள்

(எனது முதல் நூலான “பட்டாம்பூச்சிகளின் கனவுகள்”
நூல் குறித்த கவிஞர் ஏகலைவன் அவர்களின் விமர்சனம்)

உள்ளத் துள்ளது கவிதை – இன்பம்
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
தெரிந்துரைப்பது கவிதை.

என்கிற கவிமணியின் வாக்கிற்கேற்ப பல நல்ல இளம் கவிஞர்கள் உருவாகி வருவதும் தெளிந்த அழகுத் தமிழில் உலகத்து உண்மைகளை எடுத்துரைப்பதும் வரவேற்க்கப்பட வேண்டிய செய்தி.

சேலத்து இளம் கவிஞர் கோபிநாத் தன்னுடைய முதல் நூலாக வெளியிட்டிருக்கும் ஹைக்கூக் கவிதைத் தொகுப்பு “பட்டாம்பூச்சிகளின் கனவுகள்” அவரின் கவிதைக்கனவை நனவாக்கியிருக்கிறது எனலாம்.

தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றியபடி கவிதை, கட்டுரை, பேச்சு என தன்னுடைய பன்முக ஆளுமைகளை வெளிப்படுத்தி வரும் நூலாசிரியர், குழந்தைகள் சார்ந்த தன் பணியினடிப்படையில் கவியாற்றலையும் வெளிப்படுத்திட வல்லவராக உருவாகி சிறந்து விளங்குவதை “பட்டாம்பூச்சிகளின் கனவுகள்” நமக்குத் தெளிவுறா உணர்த்துகிறது.

இத்தொகுப்பில் அமைந்துள்ளா இருநூறு ஹைக்கூக்களில் ஏறத்தாழ மூன்றிலொரு பங்கு குறும்பாக்கள் பட்டாம்பூச்சிகளாய் சுற்றித்திரியும் குழந்தைகளைப் பற்றியும், குழந்தைகளின் மேதைமை, ஆசை, கனவு, மகிழ்ச்சி, துக்கம் எனப்பலவகை உணர்வுகளின் வெளிப்பாடுகள் குறித்தும் பேசுகின்றன.

வழிகாட்டும் குழந்தை
சாலையைக் கடக்கும் பார்வையற்றோர்
மலர்கிறது மனிதநேயம்
என்கிற ஹைக்கூத் தன்னுடைய வயதை மீறி செயல்பட்டு மனித சமூகத்துக்கே மனித நேயத்தின் மகத்துவத்தை எடுத்துச் சொல்லும் ஒரு குழந்தையின் முன்னுதாரணச் செயல்பாட்டை அழகுற பதிவு செய்கிறது.

மனதை மயக்கும்
மந்திர மொழி
குழந்தையின் சிரிப்பொலி
என்கிற ஹைக்கூ வாயிலாக குழந்தைச் சிரிப்பொலியின் இனிமையானது மந்திர மொழிபோக மாறி பெரியவர்கள் மனதை மகுடியின் இசைகேட்டு மயங்கும் பாம்புபோல உருமாற்றி ஆளை அசத்துகிறது என்கிற நெகிழ்வை பறைசாற்றுகிறார்.

குழந்தைகள் மறந்தனர்
யானை சவாரி
முதியோர் இல்லத்தில் தாத்தாக்கள்
என்கிற ஹைக்கூ கூட்டுக்குடும்ப முறைகள் தொலைந்து போவதால் குழந்தைகள் இழக்கும் குதூகலத் தருணாங்களை நினைவுப்படுத்துகிறது.

நெரிசலிலும் இனிமையானது
பேருந்துப் பயணம்
மடியில் உறங்கும் குழந்தை
என்கிற ஹைக்கூ பேருந்தில் வாய்க்கும் நெரிசலான சூழலிலும் கூட, மடியில் உறங்கும் குழந்தையின் கனத்தையும் மீறிய ஒரு இன்பத்தைத் தந்தளித்து, நாம் கடந்து வந்த பால்யம் நோக்கி நம் கைவிரல் பற்றி அழைத்துச் செல்வதாக எண்ணவைத்து மகிழ்வளிக்கிறது. இத்தகைய ஒரு நல்ல அனுபவத்தை அநேகமாக எல்லாப் பெற்றோரும் ஒரு கட்டத்தில் அடைந்திருப்பர்.

ஆனால், இருபத்திரண்டு வயதே நிரம்பிய இந்த திருமணமாகாத இளைஞரின் சிந்தனை ஒரு தாயுமானவனின் சிந்தனையாக அகவை கடந்த அனுபவத்தை உணர்த்தி நிற்பது பாராட்டுக்குரியது. எழுத்துக்களில் நல்ல முதிர்ச்சி தென்படுகிறது. அதேபோல சமூகம் குறித்த ஆசிரியரின் சிந்தனைகளும் சொல்லும்படியாக அமைந்திருக்கின்றன.

எதிர்காலம் மறந்து
நிகழ்காலத்தை வீணடிக்கின்றனர்
திரையரங்க வாயிலில் இளைஞர்கள்
என்கிற ஹைக்கூ இன்றைய இளைஞர்கள் நிகழ்காலத்தின் மகத்தான பணிகளை செயல்படுத்துவதை விட்டுவிட்டு, திரையரங்கங்களின்  வாயிலில் குழுமி நின்று திரைப்பட நடிகர்களின் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம், திரையரங்க வாயிலில் நட்சத்திரம் கட்டுதல் போன்ற தேவையற்ற வேலைகளாய்ச் செய்து கொண்டு இருக்கின்றனறே என்கிற தன் மனவருத்தத்தை கவிஞர் இந்த ஹைக்கூவில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

எங்கெங்கும் கடனாளிகள்
தேசம் அயல் நாட்டிடம்
குடிகள் அண்டை அயலாரிடம்
தமிழர்கள் தங்கள் சேமிக்கும் பண்பைத் தொலைத்துவிட்டு, கடன் வாங்கும் கலாச்சாரத்திற்கு ஆட்படுவதைக் குறிக்கும் விதமாக தேசம் அயல்நாட்டிடம் கடன்படுவதையும் குடிமக்கள் அண்டை அயலாரிடம் கடன்படுவதையும் உரக்கச் சொல்லும் விதமாக அமைந்துள்ளது இந்த ஹைக்கூ.

இவ்விதமான நல்ல ஹைக்கூக்கள் நிரம்பி வழியும் கவிஞர் ச. கோபிநாத் அவர்களின் இந்த முதல் நூலையே கலைவாணித் தமிழ்க்கூடம் என்கிற அமைப்பு நூலுக்கான செல்வை தாமாகவே ஏற்றுக்கொண்டு, இந்நூல் வெளிவரவேண்டுமென விரும்பி வெளியிட முன்வந்திருப்பதென்பது கவிஞரின் செம்மையான கவித்திறமையை தமிழ்கூறு நல்லுலகம் தெள்ளென உணர்ந்து வைத்திருப்பதன் நல்லதொரு அடையாளமாய் அமைந்திருக்கிறது.

கலைத்திலகம், யுவகலா பாரதி, சகலகலா வித்தகர், கலைத்துறைக் கருவூலம், முத்தமிழ் வித்தகர், சிறந்த சாதனையாளர், நகைச்சுவை அரசு, கவித்தென்றல் எனப்பல விருதுகளைப் பெற்றுள்ள கவிஞரின் இந்நூலில் கவனக்குறைவால் ஏற்பட்டுள்ளா சிற்சில எழுத்துப் பிழைகளையும், சில இடங்களில் ஹைக்கூக்கள் மறு வெளியீடாக அச்சேற்றம் பெற்றிருப்பதையும் கவனித்து சரி செய்திருந்தால நூலின் சிறப்பு இன்னும் கூடுதலாகியிருக்கக்கூடும்.

எனினும், இந்த இளம்வயதிலேயே தெளிந்த சிந்தனையோடு நல்ல கவிதைகளைப் படைத்தளித்து, நம் கரங்களில் தவழவைத்து, பட்டாம்பூச்சிகளின் பல வண்ணக் கனவுகளாய் நம்மையும் உணரச் செய்துள்ளமையை எண்ணி கவிஞரின் படைப்பாளுமையை வாழ்த்தி வரவேற்போம்.

விமர்சனம்
கவிஞர் ஏகலைவன்
ஆசிரியர் – நம்பிக்கை வாசல்
பதிப்பாசிரியர் – வாசகன் பதிப்பகம்.

நூலாசிரியர்
கவிஞர் ச. கோபிநாத்
27/12 அம்மாப்பேட்டை சாலை
பாவடி பெண்கள் பள்ளி எதிரில்
சேலம் – 636001
பேச - 9790231240

நூல்             : பட்டாம்பூச்சிகளின் கனவுகள்
வெளியீடு        : கலைவாணித் தமிழ்க்கூடம், காரைக்குடி
விலை           : ரூ. 20
நூல் தேவைக்கு : கவிஞர். ச. கோபிநாத், சேலம்



Sunday, March 3, 2013


சிகரம் இதழில் குழந்தைகளைத் தேடும் கடவுள் நூல் அறிமுகம்

குழந்தைகளைத் தேடும் கடவுள்
ஆசிரியர்   : கவிஞர் ச. கோபிநாத் – 9790231240
வெளியீடு  : வாசகன் பதிப்பகம், சேலம்

கையடக்கமான நூல் வடிவாக்கம் நேர்த்தி. யதார்த்தமான துளிப்பாக்கள்.

காலி இருக்கைகள்
நரைத்த் தலைகளால் நிரம்பின
இலக்கியக்கூட்டம்


நன்றி- சிகரம் இதழ்

Sunday, February 24, 2013



குழந்தைகளைத் தேடும் கடவுள் நூல் விமர்சனம் – தமிழ்ஆத்தர்ஸ்.காம் இணையதளத்தில்…

வாசிக்க சொடுக்கவும்…

Tuesday, February 19, 2013


குழந்தைகளைத் தேடும் கடவுள்

பார்த்த உடனே கண்ணைக் கவரும் வகையில் மிக அழகான வடிவமைப்புடன் மிகச்சிறப்பாக நூலை வெளியிட்டுள்ளீர்கள். முதலில் அதற்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல ஓவியர் அன்பழகனின் ஓவியங்கள் கவிதை நூலுக்கு ஒரு கண்ணியமான கனமான தோற்றத்தைத் தந்து நூலின் மதிப்பை இன்னும் ஒரு படி மேலே உயர்த்துகின்றன.

உங்கள் கவிதைகளை மொத்தமாக வாசிக்கும்போது சமூக உணர்வுள்ள சமூகத்தின் உயர்வுகளைப் போற்றியும் இழிவுகளைக் கண்டித்தும் எழுகின்றா கவிதைக் குரலாகவே நான் காண்கிறேன். ஆங்கில ஆசிரியரான தங்களது தீராத் தமிழ்தாகமும் தமிழுணர்வும் நூல் முழுவதும் விரவிக் கிடப்பதைக் காணும்போது பிரமிப்பும் மகிழ்ச்சியும் ஏற்படுகின்றன.

செல்பேசி, தொலைக்காட்சி போன்ற நவீனக் கருவிகளின் வருகை வாழ்க்கையை எளிமைப்படுத்திய போதிலும், இயற்கைச் சம நிலையையும் மென்மையான மன உணர்வுகளையும் அவை அழித்துவிட்டன என்பதைத் தங்களின் அநேகக் கவிதைகள் பேசுகின்றன.

மழை மாலை
எறும்புகளின் குடையாயின
காளான்கள்

வானத் தூரிகையின்
வண்ண ஓவியம்
அந்திப்பொழுது

போன்ற கற்பனைகளின் உள்ள நயமும்

கேட்பாரற்று வீழ்கிறது
தேசத்தின் எதிர்காலம்
போதையில் இளைஞர்கள்

ஊருக்கு வெளியே
சேரி
உயர்ந்த சமூகம்

போன்ற கவிதைகளில் மிளிரும் சமுதாய உணர்வும் தங்கள் கவிதைகளின் நேர்த்தியான கவித்துவத்துக்கு சான்றுகள்.

-    கவிஞர் வடுவூர் சிவ. முரளி, திருச்சி
எனது “குழந்தைகளைத் தேடும் கடவுள்” நூல் குறித்து அவர் எழுதிய விமர்சனக் கடிதத்தில்…

Saturday, January 5, 2013