Sunday, March 24, 2013




தாயுமானவனின் சிந்தனையாக மலர்ந்த ஹைக்கூக்கள்

(எனது முதல் நூலான “பட்டாம்பூச்சிகளின் கனவுகள்”
நூல் குறித்த கவிஞர் ஏகலைவன் அவர்களின் விமர்சனம்)

உள்ளத் துள்ளது கவிதை – இன்பம்
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
தெரிந்துரைப்பது கவிதை.

என்கிற கவிமணியின் வாக்கிற்கேற்ப பல நல்ல இளம் கவிஞர்கள் உருவாகி வருவதும் தெளிந்த அழகுத் தமிழில் உலகத்து உண்மைகளை எடுத்துரைப்பதும் வரவேற்க்கப்பட வேண்டிய செய்தி.

சேலத்து இளம் கவிஞர் கோபிநாத் தன்னுடைய முதல் நூலாக வெளியிட்டிருக்கும் ஹைக்கூக் கவிதைத் தொகுப்பு “பட்டாம்பூச்சிகளின் கனவுகள்” அவரின் கவிதைக்கனவை நனவாக்கியிருக்கிறது எனலாம்.

தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றியபடி கவிதை, கட்டுரை, பேச்சு என தன்னுடைய பன்முக ஆளுமைகளை வெளிப்படுத்தி வரும் நூலாசிரியர், குழந்தைகள் சார்ந்த தன் பணியினடிப்படையில் கவியாற்றலையும் வெளிப்படுத்திட வல்லவராக உருவாகி சிறந்து விளங்குவதை “பட்டாம்பூச்சிகளின் கனவுகள்” நமக்குத் தெளிவுறா உணர்த்துகிறது.

இத்தொகுப்பில் அமைந்துள்ளா இருநூறு ஹைக்கூக்களில் ஏறத்தாழ மூன்றிலொரு பங்கு குறும்பாக்கள் பட்டாம்பூச்சிகளாய் சுற்றித்திரியும் குழந்தைகளைப் பற்றியும், குழந்தைகளின் மேதைமை, ஆசை, கனவு, மகிழ்ச்சி, துக்கம் எனப்பலவகை உணர்வுகளின் வெளிப்பாடுகள் குறித்தும் பேசுகின்றன.

வழிகாட்டும் குழந்தை
சாலையைக் கடக்கும் பார்வையற்றோர்
மலர்கிறது மனிதநேயம்
என்கிற ஹைக்கூத் தன்னுடைய வயதை மீறி செயல்பட்டு மனித சமூகத்துக்கே மனித நேயத்தின் மகத்துவத்தை எடுத்துச் சொல்லும் ஒரு குழந்தையின் முன்னுதாரணச் செயல்பாட்டை அழகுற பதிவு செய்கிறது.

மனதை மயக்கும்
மந்திர மொழி
குழந்தையின் சிரிப்பொலி
என்கிற ஹைக்கூ வாயிலாக குழந்தைச் சிரிப்பொலியின் இனிமையானது மந்திர மொழிபோக மாறி பெரியவர்கள் மனதை மகுடியின் இசைகேட்டு மயங்கும் பாம்புபோல உருமாற்றி ஆளை அசத்துகிறது என்கிற நெகிழ்வை பறைசாற்றுகிறார்.

குழந்தைகள் மறந்தனர்
யானை சவாரி
முதியோர் இல்லத்தில் தாத்தாக்கள்
என்கிற ஹைக்கூ கூட்டுக்குடும்ப முறைகள் தொலைந்து போவதால் குழந்தைகள் இழக்கும் குதூகலத் தருணாங்களை நினைவுப்படுத்துகிறது.

நெரிசலிலும் இனிமையானது
பேருந்துப் பயணம்
மடியில் உறங்கும் குழந்தை
என்கிற ஹைக்கூ பேருந்தில் வாய்க்கும் நெரிசலான சூழலிலும் கூட, மடியில் உறங்கும் குழந்தையின் கனத்தையும் மீறிய ஒரு இன்பத்தைத் தந்தளித்து, நாம் கடந்து வந்த பால்யம் நோக்கி நம் கைவிரல் பற்றி அழைத்துச் செல்வதாக எண்ணவைத்து மகிழ்வளிக்கிறது. இத்தகைய ஒரு நல்ல அனுபவத்தை அநேகமாக எல்லாப் பெற்றோரும் ஒரு கட்டத்தில் அடைந்திருப்பர்.

ஆனால், இருபத்திரண்டு வயதே நிரம்பிய இந்த திருமணமாகாத இளைஞரின் சிந்தனை ஒரு தாயுமானவனின் சிந்தனையாக அகவை கடந்த அனுபவத்தை உணர்த்தி நிற்பது பாராட்டுக்குரியது. எழுத்துக்களில் நல்ல முதிர்ச்சி தென்படுகிறது. அதேபோல சமூகம் குறித்த ஆசிரியரின் சிந்தனைகளும் சொல்லும்படியாக அமைந்திருக்கின்றன.

எதிர்காலம் மறந்து
நிகழ்காலத்தை வீணடிக்கின்றனர்
திரையரங்க வாயிலில் இளைஞர்கள்
என்கிற ஹைக்கூ இன்றைய இளைஞர்கள் நிகழ்காலத்தின் மகத்தான பணிகளை செயல்படுத்துவதை விட்டுவிட்டு, திரையரங்கங்களின்  வாயிலில் குழுமி நின்று திரைப்பட நடிகர்களின் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம், திரையரங்க வாயிலில் நட்சத்திரம் கட்டுதல் போன்ற தேவையற்ற வேலைகளாய்ச் செய்து கொண்டு இருக்கின்றனறே என்கிற தன் மனவருத்தத்தை கவிஞர் இந்த ஹைக்கூவில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

எங்கெங்கும் கடனாளிகள்
தேசம் அயல் நாட்டிடம்
குடிகள் அண்டை அயலாரிடம்
தமிழர்கள் தங்கள் சேமிக்கும் பண்பைத் தொலைத்துவிட்டு, கடன் வாங்கும் கலாச்சாரத்திற்கு ஆட்படுவதைக் குறிக்கும் விதமாக தேசம் அயல்நாட்டிடம் கடன்படுவதையும் குடிமக்கள் அண்டை அயலாரிடம் கடன்படுவதையும் உரக்கச் சொல்லும் விதமாக அமைந்துள்ளது இந்த ஹைக்கூ.

இவ்விதமான நல்ல ஹைக்கூக்கள் நிரம்பி வழியும் கவிஞர் ச. கோபிநாத் அவர்களின் இந்த முதல் நூலையே கலைவாணித் தமிழ்க்கூடம் என்கிற அமைப்பு நூலுக்கான செல்வை தாமாகவே ஏற்றுக்கொண்டு, இந்நூல் வெளிவரவேண்டுமென விரும்பி வெளியிட முன்வந்திருப்பதென்பது கவிஞரின் செம்மையான கவித்திறமையை தமிழ்கூறு நல்லுலகம் தெள்ளென உணர்ந்து வைத்திருப்பதன் நல்லதொரு அடையாளமாய் அமைந்திருக்கிறது.

கலைத்திலகம், யுவகலா பாரதி, சகலகலா வித்தகர், கலைத்துறைக் கருவூலம், முத்தமிழ் வித்தகர், சிறந்த சாதனையாளர், நகைச்சுவை அரசு, கவித்தென்றல் எனப்பல விருதுகளைப் பெற்றுள்ள கவிஞரின் இந்நூலில் கவனக்குறைவால் ஏற்பட்டுள்ளா சிற்சில எழுத்துப் பிழைகளையும், சில இடங்களில் ஹைக்கூக்கள் மறு வெளியீடாக அச்சேற்றம் பெற்றிருப்பதையும் கவனித்து சரி செய்திருந்தால நூலின் சிறப்பு இன்னும் கூடுதலாகியிருக்கக்கூடும்.

எனினும், இந்த இளம்வயதிலேயே தெளிந்த சிந்தனையோடு நல்ல கவிதைகளைப் படைத்தளித்து, நம் கரங்களில் தவழவைத்து, பட்டாம்பூச்சிகளின் பல வண்ணக் கனவுகளாய் நம்மையும் உணரச் செய்துள்ளமையை எண்ணி கவிஞரின் படைப்பாளுமையை வாழ்த்தி வரவேற்போம்.

விமர்சனம்
கவிஞர் ஏகலைவன்
ஆசிரியர் – நம்பிக்கை வாசல்
பதிப்பாசிரியர் – வாசகன் பதிப்பகம்.

நூலாசிரியர்
கவிஞர் ச. கோபிநாத்
27/12 அம்மாப்பேட்டை சாலை
பாவடி பெண்கள் பள்ளி எதிரில்
சேலம் – 636001
பேச - 9790231240

நூல்             : பட்டாம்பூச்சிகளின் கனவுகள்
வெளியீடு        : கலைவாணித் தமிழ்க்கூடம், காரைக்குடி
விலை           : ரூ. 20
நூல் தேவைக்கு : கவிஞர். ச. கோபிநாத், சேலம்



No comments:

Post a Comment