Saturday, July 6, 2013

குழந்தைகளைத் தேடும் கடவுள் நூல் விமர்சனம் - முனைவென்றி நா. சுரேஷ்குமார்



குழந்தைகளைத் தேடும் கடவுள்

நூலின் ஆசிரியர்: கவிஞர் ச. கோபிநாத்

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

இந்நூல் கவிஞரின் இரண்டாவது நூலாகும். இந்நூலில் பல்வேறு கருப்பொருள்களில் ஹைக்கூ கவிதைகளை செறிவுடன் படைத்துள்ளார். 

‘கோடுகள் நெளியும் கோலம் 
நிமிர்ந்து நின்றது 
அம்மாவின் கலைத்திறன்’

தாய்மார்களின் கலைத்திறனை, அவர்களின் உழைப்பை உணர்த்துகிறது. 

தான் ஒரு ஆசிரியர் என்பதால் மனனக் கல்விமுறையைப் பற்றி காட்சிப் படுத்தியுள்ளார். 

தாய் தந்தையர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு மட்டுமே பெற்றோர்களாக இருக்க முடியும். ஆனால் ஆசிரியர்கள் தங்களிடம் படிக்கும் கோடான கோடிக் குழந்தைகளுக்கும் தாயாய்த் தந்தையாய் விளங்கக் கூடியவர்கள். அதனாலேயே பள்ளி ஆசிரியரான கவிஞரும் குழந்தைகளைப் பற்றிய கவிதைகளை யாத்துள்ளார். 

அறிவியல் சாதனங்களால் விளையும் தீமைகள், பூமி வறட்சியின் விளைவு, தனிக்குடித்தன வாழ்க்கையைப் பற்றி, நன்றி மறக்காத நாய்களைப் பற்றி என காட்சிகளை நம் கண்முன்னே தருகிறார் தன்னுடைய ஹைக்கூகளின் வழியே.

‘பசுவின் காம்பில் 
இனிதே சுரக்கிறது 
தாய்மை’

பசுவின் காம்பில் பால்தான் சுரக்கும் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். கவிஞரின் பார்வையில் தாய்மை புலப்படுகிறது. 

காதலைப் பற்றியும் சொல்லியிருக்கிறார். 

‘நம்மை அறிந்தே 
நாம் தொலையும் உலகம் 
காதல்’

தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பஞ்சத்திற்கும் வறட்சிக்கும்  இராமநாதபுரம் மாவட்டத்தையே உதாரணமாகச் சொல்லுவார்கள். இன்றும் தமிழகத்தின் பெரும்பகுதிகளில் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில்,

‘வீணாகவில்லை 
குழாயில் ஒழுகும் நீர்
தாகம் தணிக்கும் பறவை’

என்ற ஹைக்கூ, பறவையைப் பாடுகிறது. இப்படி வீணாகிறதே தண்ணீர் என்று சொல்ல முற்படுபவர்கள் முன் தாகம் தணிக்கும் பறவையைக் கண்டு அப்படி சொல்லாமலேயே சென்று விடுவார்கள். 

ஜாதிகளைக் கண்டு கொதித்தெழுகிறார் இப்படி.

‘நாகரீக மனிதன் 
நாற்றமெடுகிறது 
ஜாதிய மணம்’

மூட நம்பிக்கைகளைப் பற்றி, காணாமல்ப் போன தமிழர் விளையாட்டுகள் பற்றி என தன் ஹைக்கூ கவிதைகளால் வாசர்கள் மனம் நிறைக்கிறார். 

மொத்தத்தில், குழந்தைகளைத் தேடும் கடவுள் – சமூக நலனைத் தேடும் மனிதன்.

நன்றி - முனைவென்றி நா. சுரேஷ்குமார்

No comments:

Post a Comment