Saturday, April 27, 2013

குழந்தைகளைத் தேடும் கடவுள் – நூல் ஆய்வரங்கம்















கவிஞர் ச. கோபிநாத் அவர்களின் “குழந்தைகளைத் தேடும் கடவுள்” நூல் ஆய்வரங்க நிகழ்ச்சி 7.4.2013, ஞாயிறு மாலை 6 மணியளவில் சேலம் விஜயராகவாச்சாரியார் நூலக அரங்கில் நடைபெற்றது.

செந்தமிழ்த் தேனீ செந்தில்குமார் வரவேற்புரை வழங்கி, நிகழ்ச்சியை தொகுத்தளித்தார்.

 நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய சண்முகா மருத்துவமனை மேலாண் இயக்குனர் மருத்துவர் திரு. பி.எஸ். பன்னீர்செல்வம், “ இளைஞர்கள் பலர் மொழிமீது ஆர்வம் கொண்டு புதிய களங்களில் தங்களை வெளிப்படுத்திவருவது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

கவிஞர் முல்லை வேந்தன், கவிஞர் அய்யா.துரைசெல்வம், வாசகன் பதிப்பக பதிப்பாசிரியர், நம்பிக்கை வாசல் இதழ் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன், தலைமையாசிரியர் திரு. சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

குழந்தைகளைத் தேடும் கடவுள் நூல் குறித்த ஆய்வுரையை மக்கள் பாவலர், நகைச்சுவை அரசு. சின்னு பாண்டியராசு அவர்கள் வழங்கினார். ஆய்வுரையின்போது, “கவிஞர் ச. கோபிநாத் அவர்கள் என்னுடைய மாணவர் என்று கூறிக்கொள்வதில் உள்ள மகிழ்ச்சியைவிட, அவருடைய ஆசிரியர்  நான் என்று சொல்லிக்கொள்வதிலே தான் எனக்கு மகிழ்ச்சி. இது அவருடைய இரண்டாவது நூல் என்று சொல்லமுடியாத அளவுக்கு தெளிந்த பார்வையோடும் சிறந்த கட்டமைப்போடும் நூலை வடிவமைத்து இலக்கிய உலகிற்கு பரிசளித்திருக்கிறார் கவிஞர். ஹைக்கூவும் சேலமும் என்று சொன்னவுடனே நம் நினைவுக்கு வருபவர் கவிஞர் பொன்.குமார் அவருடைய வரிசையில் அடுத்த இடம் இனி கவிஞர் ச. கோபிநாத் அவர்களுக்குத் தான் என்றார்.

மகாகவி பாரதி இன்றளவும் விஸ்வரூபமெடுத்து வியாபித்து நிற்பதற்கு காரணம் அவருடைய கவிதைகள் மக்களைப் பாடியது தான். அதே கவிஞர் ச. கோபிநாத் அவர்களின் “குழந்தைகளைத் தேடும் கடவுள்” நூலில் உள்ள அனைத்துக் கவிதைகளும் மக்களைப் பாடுகிறது. இதுவே நூலின் முதல் வெற்றி.

நம் பண்பாடு மறந்து போன விளையாட்டுகள், காலமாற்றத்தில் அறிவியல் நமக்களித்திருக்கும் பரிசுகளாய் கிடைத்த நோய்கள், தொலைக்காட்சியில் தொலைந்து போன வாழ்க்கை முறை, இன்றைய கல்வி முறையின் நிதர்சனங்கள், சமுதாயத்தின் இன்றைய நிலையை படம்பிடித்துக்காட்டும் சூழல்கள் என அனைத்து தளங்களிலும் தன் கவிச்சாட்டையை சுழற்றியிருக்கிறார் கவிஞர் ச. கோபிநாத்.  மனிதம் பேசும் படைப்பாக குழந்தைகளைத் தேடும் கடவுள் நூல் மலர்ந்திருப்பது மகிழ்வை தருகிறது. இத்தகைய சிறந்த நூலை கொணர்ந்தமைக்காக வாசகன் பதிப்பகத்தையும் மனதார பாராட்டுகிறேன்” என்று ஆய்வின் வழியே குழந்தைகளைத் தேடும் கடவுள் நூல் குறித்த தன் பார்வையை பதிவு செய்தார் மக்கள் பாவலர் சின்னு. பாண்டியராசு.

     கவிஞர் ச. கோபிநாத் அவர்கள் ஏற்புரை வழங்கினார்,

வாசகன் பதிப்பகம் சார்பில் அனைவரும் பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக நூலகர் சின்னதம்பி நன்றியுரை கூறினார்.


No comments:

Post a Comment