Sunday, December 16, 2012

குழந்தைகளைத்தேடும் கடவுள்
நூல் விமர்சனம்

எழுத்தாளர் ஐரேனிபுரம் பால்ராசய்யா



மனதைத் தொடும் ஹைக்கூ கவிதையோடு களம் இறங்கியிருக்கிறார் கவிஞர் ச.கோபிநாத். தனது குழந்தைகளைத்தேடும் கடவுள் என்ற இந்த இரண்டாவது கவிதைத்தொகுப்பு நூலின் மூலமாக பல வாசகர்களின் மனதைத் தொட்டிருக்கிறார்.



எளிமையான விஷயங்கள் கைக்கூவாய் இவரது பேனாவிலிருந்து புறப்பட்டு அது வாசகனை வந்தடையும்போது பிரமிக்க வைக்கிறது. இந்த இளைய படைப்பாளி குழந்தைகளின் வாழ்வியலை அழகாய் வடித்தாலும் சமுதாயத்தின் மீதுதான் அதிகமாய் தனது சாட்டையை சுழட்டியிருக்கிறார்.



குழந்தைகளின் கேள்விகள் ஆழமாய் கற்பித்தன புத்தகங்களில்லா உலக அறிவு 
என்று குழந்தைகளைப்பற்றின அறிவுசார்ந்த கவிதைகளை வெறும் மூன்றே வரிகளில் முத்து முத்தாய் எழுதியிருப்பது நூலுக்கு மேலும் மேலும் அழகு சேர்க்கிறது.



சமுதாயப்பார்வையும் அதுசார்ந்த கவிதைகளும் நிஜங்களின் வலிகளை நியாயப்படுத்துகின்றன. உயிரினங்களின் உணர்வுகளை, பறவைகளின் ஏக்கங்களைக்கூட பதிவு செய்திருக்கிறார். 



திசை திரும்பின தாகத்துடன் பறவைகள் வறண்ட குளம்.



இப்படி முப்பது வரிகளில் சொல்லவேண்டிய விஷயங்களை வெறும் மூன்றே வரிகளில் முத்தாய்ப்பாய் சொல்லியிருப்பது அழகு.



வானத் தூரிகையின் வண்ண ஓவியம் அந்திப் பொழுது



என்று அந்திவானத்தின் அழகை மிகவும் அழகாய் ரசிக்கிறார்.



போதையேற்றும் அறிவியல் சாதனம் தொலைக்காட்சி 
என்று சமூகத்தின் பண்பாட்டு சீரழிவுகளை அழகாகவே படம் பிடிக்கிறார் இந்த அழகிய கவிஞர் ச.கோபிநாத்.



எளிமையும் எதார்த்தமும் கொண்டு கவிதைகள் கவன ஈர்ப்பை பெறுவதால் எல்லோர் இல்லங்களிலும் இருக்க வேண்டிய கவிதைத்தொகுப்பு. இந்த குழந்தைகளைத் தேடும் கடவுள்.



வெளியீடு : வாசகன் பதிப்பகம்

No comments:

Post a Comment