Friday, April 24, 2009


கண்ணீரில் உறையும் அவன்

நேரம் தாழ்த்தி கண் விழித்ததில் தொடங்கி

என் பணிகளின் பொருட்டு
ஏற்பட்ட தாமங்களினூடே
உணவருந்தாது விரைந்ததை
திட்டியபடியிருப்பாள் என் அன்னை!

ஊர் உறங்கும் வேளையில்
என் பணிகள் முடித்து
வீடு திரும்புகையில்
இரவுப்பொழுதென்றும் பாராது
காண் விழித்திருந்து
கதவு திறப்பாள் அவள்.

மதிப்பெண் குறைந்த‌
தேர்வு மதிப்பீட்டு அட்டைதனை
காட்ட முனைந்த வேளைகளிலெல்லாம்
தந்தை திட்டுவாரென்ற பயத்தினூடே
தாயின் துணைநாடி
தப்பிக்க முற்பட்டது என் இருப்பு.

என் விருப்பு வெறுப்புணர்ந்து
பக்குவமாய் தேர்ந்தெடுத்து
அவள் அளிக்கும்
ஓவ்வொன்றிலும்
நிச்சயம் நிறைந்திருக்கும்
அவளின் ‍பரிவுடனான அக்கறை.

அந்திவான பொழுதொன்றில்
சன்னமாய் தூறும் தூறலென‌
மனதுக்கு இதமளிக்கும் அவளிருப்பை
நான் உரைத்து
மகிழ்வில் உறைய‌
ஏக்கங்கள் எத்தனிக்க‌
கண்ணீரில் உறைகிறான்
தன் தாயை இழந்த அவன்.
என் செயல்கள் பார்த்து
அர்ப்பமென எண்ணி
தன் மேதாவித்தனம் உதிர்க்கிறான் அவன்.
மனதினுள் நினைத்து புழுங்கி
திகைப்பில் ஆழ்கிறேன் நான்.
அச்சம் தவிர்த்தொதுக்கி
என்றேனும் விதைக்க நேரலாம்
என் உதடு உமிழும் விமர்சனங்களால் பிரிதொருவனை...

Friday, February 13, 2009


சொற்களை உதிர்க்கும் உதடுகள்

கார்மேகங்களினூடே
விரையும் மழையையொத்தபடி
பிறிதொன்றைக் குறித்த‌
சிந்தனையேதுமில்லாமல் உதிர்க்கின்றன‌
உனதுதடுகள்
சொற்சுமைகளை.
பாதிப்பேதும் நிகழாவண்ணம்
ஓடி ஒளித்து வைக்க பழகிக்கொண்டேன்
உன் மீதான என் நேயத்தை
குஞ்சுகளை காக்கும்
தாய்ப்பறவையென.
மதிப்பீடுகள்

எல்லோரும் உமிழ்கின்றனர்
அவரவர் குறித்த மதிப்பீடுகளை.
ஆழத்துளைத்து ஈடுபடுகிறேன்
என்னுள்ளான தேடுதலில்
எனக்கான மதிப்பீட்டை நிறுவ.
குறைகளை விலக்கி
நிறைகளினூடே உயர்கிறது
என்னுடையதானது.
அர்ப்பமென எண்ணநேரும்
பிறருடையதானவைகள்
தகர்ப்புற செய்தபடி மேலெழுகிறது
கயமையின் வேடம் தரிக்கும்
எனதான நிறைகளை.
நேய வெளிப்பாடு

நீண்டு நெடிந்தேயிருந்தது
நேய வெளிப்பாடு குறித்த‌
எனதந்த உரையாடல்

பதப்பஞ்சமேதும் நிகழ்வுறா வண்ணம்
வலுவுடனே எத்தனித்தது
அதன் சொற்சுமைகள்.

தகிப்புகளினூடே தவிப்புறும்
சாலையோர யாசகனின்
வேண்டுதல்களை புறந்தள்ளி கடக்கிறேன்
விரையும் காற்றென‌
நேய வெளிப்பாடு குறித்த எனதப்பதங்களையும் மீறி.....
மரமான நான்

என்னுள் துளிர்த்து பெருகும்
தவிப்புகளுடனான துயர்களை உதிர்க்கிறேன்
கல்லென இறுகித் தளர்ந்த‌
உனதிதயத்தை தழுவும் பொருட்டு
பாலை நிலமொன்றில்
பொறுக்கவியலாமல்
சருகுகளை உதிர்க்கும் மரமென.....
நேயத்தின் சுவடுகள்

நுனிப்புல் மேயும் அக்கன்றென‌
விரைந்து புரட்டுகிறேன்
உனதெழுத்தைத் தாங்கிய குறிப்பேடொன்றை.

சட்டென இடரி வீழ்ந்து
சொற்கள் சொட்டும் அப்பக்கத்தை
கூர்நோக்கி பார்க்கிறது எனதந்த பார்வை.

பிரியத்துடனான உனதெதிர்பார்ப்பை
தகிப்புற்று தாங்கும்
பதங்கள் வற்றிக்கொண்டிருந்தன.
இறுகப்பற்றிக் கொண்டலையும்
உன்னுடனான நினைவுகளின் எச்சங்கள்
பற்கள் காட்டி எள்ளலோடு நகைத்தன‌
எனதிருப்பின் மீது.

நேயத்தின் சுவடுகளற்று
அன்பில்லா பாலைநிலத்தையொத்த‌
உனதிருப்பை புரிதலின்றி புறக்கணித்து
என்னுள் வியாபித்திருந்த பிரிவின் சுவடுகள்
மெல்ல இளகிக் கொண்டிருந்தது
பெய்து தீர்க்கும் மழையென.