Friday, May 4, 2012
Friday, April 27, 2012
தவறுதலால் கிடைத்த பலன்
தூரத்து உறவினரின்
மரணச் செய்தியை
சுமந்து வந்ததாக இருக்கலாம்.
பள்ளிக் கால நண்பன்
தொடர்பைத் தேடிப் பிடித்து
அழைக்க முயன்றதாக இருக்கலாம்.
பரிசு கிடைத்திருப்பதற்காகவோ
காப்பீட்டுக்கு விளக்கம் தரவோ
கார்பரேட் கணவான்கள்
அறுக்க அழைத்ததாக இருக்கலாம்.
கவிதைகளை வாசித்த
பரந்த இதயம் கொண்ட யாரேனும்
பாராட்டுவதற்கு அழைத்ததாகவும் இருக்கலாம்.
புதிய தொடர்பெண்ணை சுமந்தபடி
அலைபேசி அழைத்துக் கொண்டிருந்த
சில நொடிகளுக்குள்
பல நூறு எண்ணங்களை
அனுமானித்துக் கொண்டிருக்கையில்
வந்த அழைப்பு
தவறிய அழைப்பு ஆகியிருந்தது.
புதிய தொடர்பொன்றை
சுமக்கத் தொடங்கியிருந்தது அலைபேசி.
ச.கோபிநாத்
நன்றி
வடக்கு வாசல்
ஏப்ரல் 2012 இதழ்
Monday, March 26, 2012
புலம்பெயர் நிலை
சுவர்கள் சூழ நாம் இருப்பினும்
அவை நமதில்லை.
உரிமை கொண்டாடப்படும் அறைகள்
நாளை வேறொருவருடையதாகிறது.
புலம்பெயர் அகதிகளாய்
இடம் மாற்றப்படும் தொட்டிச் செடிகள்
சூரியக் கதிர் தேடி அலைய நேரும்
புதிதாய் குடியமரும்
அறிமுகமில்லா முகங்களை
பார்த்து வியக்கும்
சுவர்களோடு சுவர்களாய்
ஊர்ந்துத் தேயும் பல்லிகள்
புது வீடுத் தேடும் நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்படுவர்
வீடுத் தேடி வந்தவர்களும்
தகவலளிக்கும் கடிதங்கள் சுமந்துவரும்
அஞ்சல் அதிகாரிகளும்
அவ்வப்போது பொருட்கள் சுமந்து
புது வீடுத் தேட வைக்கும்
சாமானியர்களின் வாழ்நிலையை
அடையாளிக்கும் வாடகை வீடுகள்
மெய்ப்பிக்கின்றன
இன்று நம்முடையது
நாளை வேறொருவருடையதாகலாம்
ச.கோபிநாத்
நன்றி - வடக்கு வாசல் மார்ச் 2012
Friday, February 24, 2012
வண்ண வண்ண ஆடைகளை
நவக்கிரகங்களுக்குச் சுற்றி
கோள்கள் ஒன்பதென
சூளுரைத்துச் சொன்னதிலிருந்தது
வானியல் தொலைநோக்கு.
காய்களையும் கறிகளையும்
அதனதன் பண்புணர்ந்து
சரியான சேர்ப்புடன்
சரிவிகத உணவாய் அளித்ததில்
உணவே மருந்தானது.
சுக்கும் மிளகும் திப்பிலியோடு அரைபட
வாஞ்சையோடு வழங்கப்பட்ட
கசாயங்களிடம் கட்டாயம் தோல்வியுறும்
அதிநவீன மருந்துகள்.
ரசாயங்களை விஞ்சும்
சாணக் கரைசலை மருந்தாக்கி
வீட்டு வாயிலில் தெளிப்பதில்
நுழையாதிருந்தன நுண்கிருமிகள்.
இவ்வாறாக
ஆயிரமாயிரமாய் இருந்தன
அறிவியலின் விழுமியங்கள்
'அ'ன்னா 'ஆ'வன்னா அறிந்திடாத
முன்னோர்களின் மூளைகளில்.
பாவையர் மலர்- பிப்ரவரி 2012 இதழுக்காக நடத்திய "அறிவியல் ஆயிரம்"
கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை.
Subscribe to:
Posts (Atom)





