Friday, April 27, 2012




தவறுதலால் கிடைத்த பலன்

தூரத்து உறவினரின்
மரணச் செய்தியை
சுமந்து வந்ததாக இருக்கலாம்.
பள்ளிக் கால நண்பன்
தொடர்பைத் தேடிப் பிடித்து
அழைக்க முயன்றதாக இருக்கலாம்.

பரிசு கிடைத்திருப்பதற்காகவோ
காப்பீட்டுக்கு விளக்கம் தரவோ
கார்பரேட் கணவான்கள்
அறுக்க அழைத்ததாக இருக்கலாம்.

கவிதைகளை வாசித்த
பரந்த இதயம் கொண்ட யாரேனும்
பாராட்டுவதற்கு அழைத்ததாகவும் இருக்கலாம்.
புதிய தொடர்பெண்ணை சுமந்தபடி
அலைபேசி அழைத்துக் கொண்டிருந்த
சில நொடிகளுக்குள்
பல நூறு எண்ணங்களை
அனுமானித்துக் கொண்டிருக்கையில்
வந்த அழைப்பு
தவறிய அழைப்பு ஆகியிருந்தது.
புதிய தொடர்பொன்றை
சுமக்கத் தொடங்கியிருந்தது அலைபேசி.

ச.கோபிநாத்

நன்றி
வடக்கு வாசல்
ஏப்ரல் 2012 இதழ்


Monday, March 26, 2012


புலம்பெயர் நிலை

சுவர்கள் சூழ நாம் இருப்பினும்
அவை நமதில்லை.
உரிமை கொண்டாடப்படும் அறைகள்
நாளை வேறொருவருடையதாகிறது.
புலம்பெயர் அகதிகளாய்
இடம் மாற்றப்படும் தொட்டிச் செடிகள்
சூரியக் கதிர் தேடி அலைய நேரும்
புதிதாய் குடியமரும்
அறிமுகமில்லா முகங்களை
பார்த்து வியக்கும்
சுவர்களோடு சுவர்களாய்
ஊர்ந்துத் தேயும் பல்லிகள்
புது வீடுத் தேடும் நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்படுவர்
வீடுத் தேடி வந்தவர்களும்
தகவலளிக்கும் கடிதங்கள் சுமந்துவரும்
அஞ்சல் அதிகாரிகளும்
அவ்வப்போது பொருட்கள் சுமந்து
புது வீடுத் தேட வைக்கும்
சாமானியர்களின் வாழ்நிலையை
அடையாளிக்கும் வாடகை வீடுகள்
மெய்ப்பிக்கின்றன
இன்று நம்முடையது
நாளை வேறொருவருடையதாகலாம்


ச.கோபிநாத்

நன்றி -  வடக்கு வாசல் மார்ச் 2012

Friday, March 16, 2012



குழந்தைகளின் கைகளின்
வண்ணச் சுவடுகள்
மழலை ஓவியங்கள்


ச.கோபிநாத்

Thursday, March 1, 2012


வீணாக வில்லை
குழாயில் ஒழுகும் நீர்,
தாகம் தணிக்கும் பறவைகள்!!
-ச.கோபிநாத்
நன்றி - வைகறை இணைய இதழ்

கைகள் குறுக்கி
கன்னங்கள் குவித்து
எச்சிலொழுகத் தூங்கும்
குழந்தைகளின் தூக்கத்தில்
தொலைத்துவிடுகிறோம்
நம்மையும் நம் துயரங்களையும்.

ச.கோபிநாத்

Friday, February 24, 2012


அறிவியல் ஆயிரம்

வண்ண வண்ண ஆடைகளை

நவக்கிரகங்களுக்குச் சுற்றி
கோள்கள் ஒன்பதென
சூளுரைத்துச் சொன்னதிலிருந்தது
வானியல் தொலைநோக்கு.
காய்களையும் கறிகளையும்
அதனதன் பண்புணர்ந்து
சரியான சேர்ப்புடன்
சரிவிகத உணவாய் அளித்ததில்
உணவே மருந்தானது.
சுக்கும் மிளகும் திப்பிலியோடு அரைபட‌
வாஞ்சையோடு வழங்கப்பட்ட
கசாயங்களிடம் கட்டாயம் தோல்வியுறும்
அதிநவீன மருந்துகள்.
ரசாயங்களை விஞ்சும்
சாணக் கரைசலை மருந்தாக்கி
வீட்டு வாயிலில் தெளிப்பதில்
நுழையாதிருந்தன நுண்கிருமிகள்.
இவ்வாறாக‌
ஆயிரமாயிரமாய் இருந்தன‌
அறிவியலின் விழுமியங்கள்
'அ'ன்னா 'ஆ'வன்னா அறிந்திடாத‌
முன்னோர்களின் மூளைகளில்
.

பாவையர் மலர்- பிப்ரவரி 2012 இதழுக்காக நடத்திய "அறிவியல் ஆயிரம்"
கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை.

Wednesday, February 15, 2012




விரைவில் வெளிவருகிறது
கவிஞர் ச.கோபிநாத்தின்
புதிய ஹைக்கூ நூல்

வாழ்வை சாதாரணமாய் கடந்து செல்லும் நம்மை சிந்திக்கவும்
அதன் அழகியலை உணரவும் செய்யும் ஹைக்கூ கவிதைகள்...


வாசிக்க சில....

*
புத்தகத்தில் இருப்பதை
மூளையில் ஏற்று
மெக்காலே முறை

*
நிலா
முற்றம்
ஏக்கத்தில் குழந்தைகள்


வாசகன் பதிப்பக வெளியீடு