Friday, March 16, 2012
Friday, February 24, 2012
வண்ண வண்ண ஆடைகளை
நவக்கிரகங்களுக்குச் சுற்றி
கோள்கள் ஒன்பதென
சூளுரைத்துச் சொன்னதிலிருந்தது
வானியல் தொலைநோக்கு.
காய்களையும் கறிகளையும்
அதனதன் பண்புணர்ந்து
சரியான சேர்ப்புடன்
சரிவிகத உணவாய் அளித்ததில்
உணவே மருந்தானது.
சுக்கும் மிளகும் திப்பிலியோடு அரைபட
வாஞ்சையோடு வழங்கப்பட்ட
கசாயங்களிடம் கட்டாயம் தோல்வியுறும்
அதிநவீன மருந்துகள்.
ரசாயங்களை விஞ்சும்
சாணக் கரைசலை மருந்தாக்கி
வீட்டு வாயிலில் தெளிப்பதில்
நுழையாதிருந்தன நுண்கிருமிகள்.
இவ்வாறாக
ஆயிரமாயிரமாய் இருந்தன
அறிவியலின் விழுமியங்கள்
'அ'ன்னா 'ஆ'வன்னா அறிந்திடாத
முன்னோர்களின் மூளைகளில்.
பாவையர் மலர்- பிப்ரவரி 2012 இதழுக்காக நடத்திய "அறிவியல் ஆயிரம்"
கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை.
Wednesday, February 15, 2012
நட்பின் அரிதாரம்
பச்சையம் தவிர்க்கும்
கலப்பின தாவரமென
விலக்க முயல்கிறேன்
உன்னோடு வாய்த்த என தந்த பொழுதுகளை.
கண்ணுக்கு புலப்படும் தொலைவில்
நிராதரவுற்று நிற்கும் தனிமை
வெம்மையின் கணைகளை தொடுத்தபடி
சுமைகூட்டிக் கொண்டிருக்கிறது
கனத்திருந்த மனப்பரப்பை.
சங்கடங்களினூடே
குற்றவுணர்வுகளால் ததும்புகிறது
தளர்வை புறந்தள்ளி
இறுக்கமுற்ற இதயம்
நிரந்தரமின்மைகளின்
சுவடுகளை தொட்டசைத்தவாறு
பற்றிக் கொள்ள முயலும்
எனதான கரங்களை உதறியபடி
துகளென துளிர்த்து
கடலென பெருக முயல்கிறது
அகோரப் பசியுற்றிருக்கும்
என் மீதான உன் பகைமை
நட்பின் அரிதாரம் பூசி.
ச.கோபிநாத்
நன்றி : வடக்கு வாசல் இணையதளம்
Subscribe to:
Posts (Atom)





