Thursday, May 12, 2011


மழைக்கு பிந்தைய
மாலை பொழுதில்
நீர் சொட்டும் இலைகளை சுமக்கும்
மரங்களின் அடியில் நின்றவாறு
விளையாட்டாய் கிளைகளை ஆட்டும்
குழந்தைகளின் மனதை
குதூகலப்படுத்தவே முத்தமழை பொழிகின்றன‌
பச்சையம் படர்ந்த‌ இலைகள்.

ச.கோபிநாத்

Thursday, April 28, 2011


கவனச்சிதறல்

நம்பிக்கை துளிர்க்கும் தருவாயில்
அதன் முனைகளை மழுங்கசெய்கிறது
உனது வார்த்தைகள்.
காதுகளை செயலிழக்க செய்து செவிடனாகி
முயன்று முன்னேறுகிறேன்
கண்களின் முன் சில செயல்கள் நிகழ்த்தி
மீண்டும் திசை திருப்ப முனைகிறாய்.
இப்போது கண்களை கட்டிக்கொண்டு
கண்ணிருந்தும் பார்வையற்றவனாகிறேன்.
தொடர்ந்து திசைதிருப்புகிறாய்
என் கவனத்தை நீ
தொடர்ந்து முயன்றுகொண்டிருக்கிறேன் நான்
தீர்மானமாய் உணர்ந்துகொண்டேன் நான்
திசைதிருப்புவதில் நீயும்
இலக்கின் உச்சம் அடைவதில் நானும்
நம்பிக்கையோடிருப்பதாய்.

நன்றி
வார்ப்பு இணையதளம்

Monday, April 25, 2011















இன்னும் கொஞ்சம்
இன்னும் கொஞ்சமென
பாசம் பிணைக்க பரிமாறும்
அம்மாவின் அன்பிற்காகவே
மீண்டும் பசிக்க செய்கிறது
ஏற்கனவே நிறைந்த வயிறு.

ச.கோபிநாத்

Saturday, March 5, 2011



வழிகாட்டும் குழந்தை
சாலையை கடக்கும் பார்வையற்றவர்
மலர்கிறது மனிதநேயம்

ச‌.கோபிநாத்

நன்றி : கே.கே.ஐ குறுஞ்செய்தி இதழ்



விரிவடையும் சாலை
விழுங்கப்படும் விளைநிலங்கள்
வளர்ச்சிப்பாதையில் இந்தியா

ச‌.கோபிநாத்

நன்றி : வாலிதாசன் குறுஞ்செய்தி இதழ்

Wednesday, March 2, 2011




பேதைமை


அடர்வனமொன்றில்
இலைகளிடையே நுழைந்துத் தரைதொடும்
சூரியக் கதிர்களின் துணைக் கொண்டு தேடி அலைகிறேன்.
புலப்படாத புதருக்குள் சென்று மறைந்தவாறே
முகம்காட்டி என்னை அழைக்கிறது
நடையைத் துரிதப்படுத்த
ஓடியவாறே இருக்கிறது
பருத்தியென மேனிக்கொண்ட முயல்
கைகளுக்கு எட்டும் தூரத்திலிடிருந்தும்
அதன் போக்கில் விட்டு விளையாடித் தொடர்கிறேன்
ஏதுமறியா குழந்தையென.

ச.கோபிநாத்

நன்றி : வடக்கு வாசல் இதழ் மற்றும் இணையதளம்

Monday, February 28, 2011








வழியனுப்புதல்

"டாட்டா" காட்டுவதால்
பெரியதாய் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை
எனினும்,
ஏதோ இழந்தவாறு
உணர நேர்கிறது
"டாட்டா" காட்ட மறுத்தபடி
வழியனுப்பும் குழந்தையின் செய்கையால்..!

-ச.கோபிநாத்.

நன்றி
நீலநிலா வலைப்பூ மற்றும் இதழ்